Published : 03 Jul 2022 04:54 AM
Last Updated : 03 Jul 2022 04:54 AM

மகாராஷ்டிரா பேரவைத் தலைவர் தேர்தல் | சமபலம் இருபப்தால் பாஜக - சிவசேனா இடையே கடும் போட்டி

மும்பை: மகாராஷ்டிர பேரவைத் தலைவர் தேர்தலில் பாஜக, சிவசேனா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினார். இதையடுத்து பேரவையில் பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரி உத்தரவிட்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவு, பாஜகவினரின் ஒத்துழைப்புடன் மகாராஷ்டிர முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியில் அமர்ந்துள்ளார். துணை முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவர் பதவி ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரியில் பேரவைத் தலைவராக இருந்த நானா படேல் ராஜினாமா செய்து, மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து சட்டப்பேரவைக்கு துணை தலைவராக இருந்த நர்ஹரி ஜிர்வால் கூடுதல் பொறுப்பேற்று அந்தப் பதவியை தொடர்ந்து வகித்து வருகிறார்.

இந்நிலையில் புதிய அரசு ஜூலை 4-ம் தேதி பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, பேரவைத் தலைவர் பதவியைக் கைப்பற்ற சிவசேனா மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த கூட்டணி அரசு தரப்பில், மகாராஷ்டிரா பேரவைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ராகுல் நர்வேகர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகியவை இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி தரப்பில், சிவசேனா எம்எல்ஏ ராஜன் சால்வி போட்டி யிடுகிறார்.

இந்நிலையில் நேற்று காலை பேரவைத் தலைவர் பதவிக்கு ராஜன் சால்வி வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரவைத் தலைவர் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கூறுகையில், "சிவசேனா எம்எல்ஏ ராஜன் சால்வி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இப்பதவிக்கு காங்கிரஸ் சார்பில் ஒருவரை நிறுத்த முதலில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது, ஆனால் நாங்கள் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) ஆலோசித்து தற்போது ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றார்.

இதைப் போலவே பாஜக சார்பில் கொலபா தொகுதி எம்எல்ஏ-வான ராகுல் நர்வேக்கர் நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பேரவையில் இரு கூட்டணிகளுக்கும் ஏறக்குறைய சமபலம் இருப்பதால் பேரவைத் தலைவரைத் தேர்வு செய்வதில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x