Published : 03 Jul 2022 03:54 AM
Last Updated : 03 Jul 2022 03:54 AM

தமிழ்நாடு, ஆந்திராவில் ஆட்சிக்கு வருவது பற்றி பாஜக செயற்குழுவில் ஆலோசனை - ஹைதராபாத் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு

ஹைதராபாத்தில் நேற்று தொடங்கிய பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். படம்: பிடிஐ

ஹைதராபாத்: பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஒட்டலில் தொடங்கிய இக்கூட்டத்துக்கு கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமை வகித்தார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஸ்மிருதி இரானி மற்றும் யோகி ஆதித்யநாத், பசவராஜ் பொம்மை உட்பட பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த 18 முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 348 பேர் கலந்து கொண்டனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைப்பது, கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்துவது, தெலங்கானாவில் 2024-ல் ஆட்சியைப் பிடிப்பது, ஆந்திரா, தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்தி, ஆட்சியைப் பிடிப்பது, மாநிலப் பிரச்சினைகளுக்காக போராடுவது என்று முதல் நாள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்ட மேடையில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இக்கூட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏழ்மை ஒழிப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிய, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் வழிமொழிந்தனர்.

நாட்டில் ஏழைகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதே பாஜகவின் தலையாய கடமை, ஏழைகளின் மேம்பாட்டுக்காகவே பிரதமர் ஒவ்வொரு திட்டத்தையும் வகுக்கிறார் எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

அரசியல் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன் மொழிந்தார். அதில், குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா தேர்தல்களில் பாஜகவின் வெற்றிக்கான வியூகங்கள் குறித்து அவர் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் தங்கியுள்ள ஓட்டல் வளாகத்தில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. பின்னர், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்டம் இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து, இன்று இரவு ஹைதராபாத் ராஜ்பவனில் பிரதமர் மோடி தங்க உள்ளார். நாளை (ஜூலை 4) காலை தனி விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x