

கேரள சட்டப்பேரவை தேர்தலில் இடதுசாரி முன்னணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று டெல்லியில் இருந்து கொச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய யெச்சூரியிடம் தேர்தல் நிலவரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறும்போது, ‘‘கேரளாவில் கடந்த 5 ஆண்டு களாக எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. ஊழல் மற்றும் நிர்வாகமின்மையால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அக்கட்சிக்கு எதிராக வாக்களிக்க மக்கள் முடிவு எடுத்து விட்டனர். இதனால் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. தேர்தலுக்கு பின் நாங்கள் தான் புதிய ஆட்சியை அமைப்போம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்’’ என்றார்.
மொத்தம் உள்ள 140 தொகுதி களில் இடதுசாரி கூட்டணி எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.