

தொழிலதிபர் விஜய் மல்லையாவை ஒப்படைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்குமாறு இன்டர்போல் அமைப்புக்கு (சர்வதேச போலீஸ்) அமலாக்கத் துறை கோரிக்கை வைத்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ-க்கு அமலாக்கத் துறை இயக்குநரகம் கடிதம் எழுதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இன்டர்போல் சார்பில் கைது வாரன்ட் பிறப்பிக்கும் முகமையாக சிபிஐ செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டர்போல் கைது வாரன்ட் பிறப்பித்தால், சம்பந்தப்பட்ட நபர் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கைது செய்து ஒப்படைக்கு மாறு அந்த நாட்டுக்கு கோரிக்கை வைக்க முடியும்.
ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ.900 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத மல்லையா மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவரிடம் நேரில் விசாரணை நடத்த அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக அவரை இந்தியா கொண்டுவர முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது.