

கேரள மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்ட வழக்கில் ஜாமீன் கோரி இத்தாலி கடற்படை வீரர் சல்வடோர் கிரோன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புக் கொண்டது.
கடந்த 2012-ம் ஆண்டு கேரள மீனவர்கள் இருவரை, கொள்ளை யர்கள் என நினைத்து சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் சல்வடோர் கிரோன் மற்றும் மசிமிலியானோ லட்டோர் இருவ ரையும் இந்தியா கைது செய்தது. உடல்நலம் காரணமாக லட்டோர் இத்தாலிக்கு செல்ல அனுமதிக் கப்பட்டது.
ஆனால் சல்வடோர் கிரோனுக்கு அனுமதி மறுக்கப்பட் டதால் கடந்த 4 ஆண்டுகளாக அவர் இந்தியாவில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் நெதர்லாந்தின் ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் கடந்த ஆண்டு ஒப்புக் கொண்டன. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் ‘சல்வடோர் இத்தாலி திரும்ப இந்தியா அனுமதிக்க வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் சமயத்தில் சல்வடோர் கிரோனை, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைப் பது இத்தாலியின் கடமையாகும். மேலும் கிரோனின் ஜாமீன் தொடர் பான நிபந்தனைகளை விதிப்பதில் இந்தியாவின் உச்ச நீதிமன்றமே இறுதி முடிவு எடுக்கும்’ என்றும் தெரிவித்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கியிருந்தார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி கிரோன் தாக்கல் செய்த புதிய மனுவை விசாரிக்க உச்ச நீதி மன்றம் நேற்று ஒப்புக் கொண்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.