Published : 02 Jul 2022 04:48 AM
Last Updated : 02 Jul 2022 04:48 AM

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு - சர்வதேச அளவில் உணவு, எரிபொருள் பற்றாக்குறை குறித்தும் ஆலோசனை

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும், சர்வதேச அளவில் உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

நேட்டோவில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே நேற்று 128-வது நாளாக போர் நீடித்தது. போரில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நான்கு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போரில் சுமார் 30 ஆயிரம் உக்ரைன் வீரர்களை சுட்டுக் கொன்றிருப்பதாக ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல, சுமார் 35,450 ரஷ்ய வீரர்கள் போரில் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் கூறி வருகின்றன. இப்போதைய, நிலவரப்படி உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுமார் 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதி ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது.

இந்த போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே இந்தியா நடுநிலை வகித்துவருகிறது. “ரஷ்யாவும் உக்ரைனும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வை எட்ட வேண்டும். போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மோடி அறிவுரை

இதுதொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பலமுறை தொலைபேசியில் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, போர் தொடங்கியபோது உக்ரைனில் சிக்கித் தவித்த சுமார் 20 ஆயிரம் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டது.

போர் நீடித்துவரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அரசு ரீதியான பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், சர்வதேச அளவில் உணவு தானியங்கள், உரங்கள், எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

கடந்த ஆண்டு டிசம்பரில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வந்தார். அப்போது, உணவு தானியங்கள், உரங்கள், மருந்துகள் தொடர்பான ஏற்றுமதி, இறக்குமதி குறித்து புதினும் மோடியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எட்டப்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

ரஷ்யா அறிக்கை

ரஷ்ய அதிபர் மாளிகை நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவுக்குத் தேவையான எரிசக்தி, உரங்கள், உணவு தானியங்களை ரஷ்யா தொடர்ந்து வழங்கும். குறிப்பிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அந்த நாடுகள் தங்கள் தவறை விரைவில் உணரும். ரஷ்யா மீதான தடை காரணமாகவே சர்வதேச சந்தையில் எரிபொருள், உணவு தானியங்கள், உரங்களின் விலை உயர்ந்திருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கவில்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த நாட்டின் ராணுவ தளங்கள் மட்டுமே அழிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் எடுத்துரைத்தார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடோடோவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று முன்தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தோனேசியா உட்பட ரஷ்யாவின் நட்பு நாடுகளுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பேட், பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களை தொடர்ந்து வழங்குவோம். எரிபொருள், உணவு தானியங்களையும் தடையின்றி விநியோகம் செய்வோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x