

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா தாக்கூர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்.ஐ.ஏ. கைவிட்டது தொடர்பாக மோடி அரசு மீது காங்கிரஸார் கடும் விமர்சனங்களை அள்ளி வீசியுள்ளனர்.
2008-ம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை தேசிய விசாரணைக் கழகம் கைவிட்டதையடுத்து ஆர்.எஸ்.எஸ். சார்பு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களை மோடி அரசு பாதுகாக்கிறது என்று காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விசாரணையில் எந்த வித தலையீடும் இல்லை. மாறாக இந்த வழக்கில் பிரக்யாவை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் என்றார்.
திக்விஜய் சிங் கூறும் போது, “இந்து வலது சாரி செயல்பாட்டாளர்களை நீங்கள் காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம் என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் ஈடுபடும் இத்தகையோருடன் உங்கள் உறவுகள் உள்ளது என்பதும் எங்களுக்குத் தெரியும், இதனால்தான் என்.ஐ.ஏ மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்க் உயர் மட்டத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.” என்றார்.
அவர் மேலும் கூறும்போது ஹேமந்த் கர்கரே போன்ற நேர்மையான, கடமை உணர்வு மிக்க அதிகாரிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு தனது உயிரையே பணயம் வைத்தார், ஆனால் அவர் ஆதாரங்களை இட்டுக் கட்டியுள்ளார் என்று கூறுவது இழிவானது என்றார்.
ஆனால் பாஜக தொடர்ந்து என்.ஐ.ஏ. விசாரணைகளில் அரசின் தலையீடு இல்லை என்றும் காங்கிரஸ் கட்சிதான் தங்கள் ஆட்சிக் காலத்தில் விசாரணை அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து சாத்வி போன்றவர்களை இதில் குற்றவாளியாகச் சேர்த்துள்ளது என்றும் பதில் கூறி வருகிறது.