Published : 01 Jul 2022 04:11 AM
Last Updated : 01 Jul 2022 04:11 AM

ஆர்எஸ்எஸ் தொண்டர் டு மகாராஷ்டிர முதல்வர் - யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்று பதவியேற்றார்.

முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு 44, தேசியவாத காங்கிரஸுக்கு 54 இடங்கள் கிடைத்தன.

சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதை பாஜக ஏற்காததால் கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

அதன்பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா இணைந்து 2019 நவம்பர் 28-ம் தேதி கூட்டணி அரசை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, திடீரென கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவருக்கு 38 சிவசேனா எம்எல்ஏக்களும், சில சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு அளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதையடுத்து, ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத் தலைவர் நரஹரி ஜிர்வால் அண்மையில் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து 16 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது ஜூலை 12-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்தச் சூழலில் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேட்டுக் கொண்டார். இதை எதிர்த்து சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு தாக்கல் செய்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்தது. இதனால், வேறு வழியின்றி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து கோவாவில் இருந்த ஏக்நாத் ஷிண்டே, நேற்று பிற்பகல் மும்பை திரும்பினார். அவரும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸும் நேற்று மாலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, “பாஜகவும், சிவசேனாவும் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டன. எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்தனர். ஆனால், எதிரணியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தது. பால் தாக்கரேவின் கொள்கைக்கு விரோதமாக ஆட்சி நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார். புதிய அரசில் நான் இடம்பெற மாட்டேன். ஷிண்டேவும் பாஜக தலைவர்களும் இணைந்து அமைச்சரவையை முடிவு செய்வார்கள்” என்றார்.

ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “பாஜகவிடம் அதிக எம்எல்ஏக்கள் உள்ள போதிலும் முதல்வராக எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது. பட்னாவிஸ் பரந்தமனம் கொண்டவர். அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா ஆகியோருக்கும் நன்றி. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் சிவசேனா கூட்டணி அமைத்ததை கட்சி எம்எல்ஏக்கள் ஏற்கவில்லை. இந்துத்துவாவை காப்பாற்ற துணிந்து முடிவு எடுத்தோம். புதிய ஆட்சியில் பால் தாக்கரேவின் கொள்கைகளை அமல் செய்வோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.

பதவியேற்பு விழா

இதையடுத்து, மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்றிரவு 7.30 மணிக்கு பதவியேற்பு விழா நடந்தது. இதில் மகாராஷ்டிர புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றார். பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இருவருக்கும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய அரசில் இடம்பெற மாட்டேன் என்று முதலில் கூறிய பட்னாவிஸ், கட்சித் தலைமையின் அறிவுரையை ஏற்று துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஷிண்டே அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கோவாவில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, பாஜக மூத்த தலைவர்களும் அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். எனவே, அமைச்சரவை பின்னர் பதவியேற்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 287 எம்எல்ஏக்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 144 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி பாஜக 106, ஷிண்டே அணி 39, சுயேச்சைகள் 13 பேர், சிறிய கூட்டணி கட்சிகள் 10 எம்எல்ஏக்கள் என புதிய கூட்டணி அரசுக்கு 168 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும். பெரும்பான்மை எம்எல்ஏக்கள் சிவசேனாவில் இருந்து விலகியிருப்பதால் ஷிண்டே அணி மீது கட்சித் தாவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வாழ்த்துகள். கடைநிலையில் இருந்து உயர்நிலைக்கு அவர் வந்துள்ளார். அவரது அரசியல், நிர்வாக அனுபவம் ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படும். மகாராஷ்டிராவை புதிய உச்சத்துக்கு அவர் கொண்டு செல்வார் என்று உறுதியாக நம்புகிறேன்.

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் அவர் முன்னுதாரணமாக திகழ்கிறார். அவரது அனுபவம், நிர்வாக திறமை அரசுக்கு மிகப்பெரிய பக்க பலமாக அமையும். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அவர் உறுதுணையாக இருப்பார். இவ்வாறு பிரதமர் தெரிவித் துள்ளார்.

யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டம் பகாரி ஜவாலி பகுதியில் 1964-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி பிறந்தவர் ஏக்நாத் ஷிண்டே. தாணே நகரில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொண்டராக இருந்தார். பின்னர் தாணே பகுதி சிவசேனா மூத்த தலைவர் ஆனந்த் திக்கேவுடன் இணைந்தார். முதலில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார். பின்னர் படிப்படியாக வளர்ந்து எம்எல்ஏவாகவும், அதன்பிறகு அமைச்சராகவும் உயர்ந்தார்.

கடந்த 2001 ஆகஸ்ட் 26-ம் தேதி விபத்தில் ஆனந்த் திக்கே உயிரிழந்தார். அதன்பிறகு ஏக்நாத் ஷிண்டே, தாணே பகுதி சிவசேனாவின் மூத்த தலைவராக உருவெடுத்தார்.

கடந்த 2000-ம் ஆண்டில் சதாராவில் உள்ள நீர்நிலையில் ஷிண்டே குடும்பத்துடன் படகில் சென்றார். அப்போது படகு கவிழ்ந்து அவரது 11 வயது மகனும், 7 வயது மகளும் உயிரிழந்தனர். தற்போது ஷிண்டேவுக்கு, ஸ்ரீகாந்த் என்ற மகன் மட்டும் உள்ளார். மருத்துவரான ஸ்ரீகாந்த், மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

ஆட்டோ ஓட்டுநரான ஷிண்டே, 3 கட்சிகளின் (3 சக்கரங்கள்) ஆட்சியை (ஆட்டோவை) பஞ்சராக்கி உள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x