மோடியை சந்திக்க பட்னாவிஸ் திட்டம்: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விவகாரம்

மோடியை சந்திக்க பட்னாவிஸ் திட்டம்: மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விவகாரம்
Updated on
1 min read

மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பட்னாவிஸ் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மருத்துவ படிப்பு களுக்காக தேசிய நுழைவுத் தேர்வு நடத்துவதால் பாதிப்பு ஏற்படும் என்று மாணவர்களும் பெற்றோரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளேன். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடிந்தவரை முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்காக, இந்த ஆண்டு முதல் தேசிய நுழைவுத் தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனிடையே, மாநில அளவில் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி கோரி பல்வேறு மாநில அரசுகள் சார்பில் தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் பட்னாவிஸை நேற்று சந்தித்துப் பேசினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு, மாணவர்களின் கவலை பற்றி எடுத்துரைத்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “நாட்டை ஆட்சி செய்வது மத்திய அரசா அல்லது உச்ச நீதிமன்றமா என்று பிரதமரிடம் கேட்டேன். மருத்துவக் கல்லூரி சேர்க்கைக் காக, மாநில அளவில் பொது நுழைவுத் தேர்வு (சிஇடி) இருக்கும் போது, நீட் தேர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன” என்றார்.

மகாராஷ்டிராவில், கடந்த 5-ம் தேதி நடைபெற்ற சிஇடி தேர்வை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in