Published : 30 Jun 2022 05:38 AM
Last Updated : 30 Jun 2022 05:38 AM

மறைந்த தந்தையின் மெழுகுச் சிலையை தங்கைக்கு பரிசாக வழங்கிய அண்ணன்

தந்தையின் மெழுகுச் சிலைக்கு முத்தமிட்டு மகிழும் மணப்பெண் சாய் வைஷ்ணவி.

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவுல சுப்ரமணியம். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஃபனி குமார் என்ற மகனும் சாய் வைஷ்ணவி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுப்ரமணியம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் குடும்பத்தினரை மிகவும் பாதித்தது. இந்நிலையில் சாய் வைஷ்ணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மறைந்த தனது தந்தையின் மெழுகுச் சிலையை தங்கைக்கு திருமணப் பரிசாக வழங்க ஃபனி குமார் முடிவு செய்தார். அதன்படி தாய் மற்றும் தங்கைக்கு தெரியாமல் பெங்களூருவில் தந்தையின் மெழுகுச் சிலையை தயாரித்தார்.

இதையடுத்து அண்மையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இந்த மெழுகுச் சிலையை திருமண மண்டபத்தில் ஃபனி குமார் வைத்தார். பின்னர் திருமண மண்டபத்திற்கு வந்த தனது தாயார் மற்றும் தங்கைக்கு தந்தையின் தத்ரூப மெழுகு சிலையை காண்பித்தார். முதலில் அதைப் பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு உணர்ச்சிப் பெருக்கில் சிலையை கட்டித் தழுவி கண்ணீர் விட்டனர். தனது திருமணத்திற்கு தந்தையே நேரில் வந்து வாழ்த்தியதுபோல் உணர்ந்தார் மணமகள் சாய் வைஷ்ணவி.

தாயார் ஜெயஸ்ரீ தனது கணவரின் மெழுகுச் சிலை அருகிலேயே அமர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்தார். மெழுகுச் சிலையாக தனது மகளின் திருமணத்தில் ஆஜரான ஆவுல சுப்ரமணியத்தின் அருகில் நின்று நண்பர்களும் உறவினர்களும் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x