

மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார். இவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க உள்ளனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 2 ஆம் முறையாக வென்று ஆட்சி அமைக்கிறார் மம்தா பானர்ஜி. இங்கு அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு கிடைக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, அவரது வெற்றி உறுதியாகி விட்ட நிலையில் பிரதமர் மோடி தனது ட்வீட் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
மம்தாவின் வெற்றி குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, ‘மம்தாவின் சிறந்த வெற்றிக்கு வாழ்த்துகிறேன். இவரது 2 ஆம் முறையான ஆட்சிக்கு எனது வாழ்த்துக்கள்’ எனக் கூறியுள்ளார்.
இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்காளத்தை கடந்த 2011-ல் தகர்த்து முதல் அமைச்சரானவர் மம்தா பாணர்ஜி. இவருக்கு அங்கு இரண்டாவது முறை ஆட்சி அமைக்கும் வாய்பு கிடைத்து வருகிறது. இம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளின் 216-ல் மம்தாவின் கட்சி முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் கூட்டணி 29, காங்கிரஸ் 41 மற்றும் பாஜக 8 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதர கட்சிகள் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
இவற்றில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான குர்கா ஜன்முக்தி மோர்ச்சா டார்ஜிலிங்கின் இரு தொகுதிகளில் அதிக வாக்குகளுடன் அங்கம் வகிக்கிறது. மேற்கு வங்காளத்தின் எதிர்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒன்றிணைந்தும் மம்தாவின் கை ஒங்கியுள்ளது.