Published : 29 Jun 2022 09:53 AM
Last Updated : 29 Jun 2022 09:53 AM

மகாராஷ்டிரா அரசியல் | நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும்: உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு

உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடியால் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிஎஸ் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் மஹா விகாஸ் அகாதிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் கடிதத்தின் விவரம்: சட்டப்பேரவை செயலருக்கு ஆளுநர் பிஎஸ் கோஷியாரி எழுதியுள்ள கடிதத்தில், அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில், சிவசேனா கட்சியின் 39 எம்எல்ஏ.,க்கள் மஹா விகாஸ் அங்கதியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். இதனால், அரசாங்கம் சுமுகமாக அனைவரின் நம்பிக்கையையும் பெற்று இயங்க வேண்டுமென்றால் அதற்கு முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதனால் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடப்படுகிறது. அதேபோல், சில கடுமையான அறிக்கைகள் என் கவனத்திற்கு வந்ததால், சட்டப்பேரவையின் வெளியேயும், உள்ளேயும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாளை சிவசேனாவுக்கு மிகப்பெரிய நாளாக இருக்கும். ஆட்சி கவிழ்ப்பா இல்லை பெரும்பான்மை நிரூபிப்பார் என பாஜகவுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.

தயார்நிலையில் ஏக்நாத் ஷிண்டே: மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கக் கோரி, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலரும் தற்போது குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் புதிய அரசு அமைப்பதற்கான வியூகத்துடன், பாஜக தயார் நிலையில் உள்ளதாக மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

அசாம் டூ கோவா: அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், "நாங்கள் விரைவில் மும்பை சென்று, ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரியை சந்தித்துப் பேசவுள்ளோம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னுடன் வந்துள்ள 50 எம்எல்ஏ.க்களும், சொந்த விருப்பத்தின் பேரில் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளோம். சுயநலத்துக்காக வரவில்லை. இந்துத்துவா மற்றும் பாலசாகிப் கொள்கையுடன் நாங்கள் வந்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மும்பை செல்வதற்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லியில் அவர் பாஜக தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்புள்ளது.

இதற்கிடையில் அசாமில் உள்ள அதிருப்தி அணியினர் இன்று கோவாவில் உள்ள தாஜ் ஓட்டலுக்கு அழைத்து வரப்படுவார்கள். அங்கிருந்து அவர்கள் நாளை மும்பைக்கு நேரடியாக அழைத்துவரப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் மனு: இதற்கிடையில் சிவசேனா சார்பில் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 16 எம்.எல்.ஏ.,க்கள் தகுதிநீக்க விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆணை பிறப்பித்துள்ளது சட்டவிரோதமானது என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x