Published : 29 Jun 2022 04:28 AM
Last Updated : 29 Jun 2022 04:28 AM
சென்னை: இந்தியாவுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலையுணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.
அதன்படி, சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உட்பட 3 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இறுதிக்கட்ட பணிகளுக்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் இன்று (ஜூன் 29) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
முதன்மை செயற்கைக் கோளான டிஎஸ்-இஓ, 365 கிலோ எடை கொண்டது. இது வண்ணப் புகைப்படம் எடுக்கும் திறன் உடையது. இதுதவிர, 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இது அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும்.
இதனுடன், கல்விசார் பணிக்காக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலை. மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் (2.8 கிலோ) விண்ணில் ஏவப்பட உள்ளது. அவற்றை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பாகமான பிஎஸ்4 இயந்திரம் உதவியுடன், சில ஆய்வுக் கருவிகளும் வலம்வர உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT