Published : 29 Jun 2022 03:52 AM
Last Updated : 29 Jun 2022 03:52 AM
குவாஹாட்டி: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழுவினர் விரைவில் மும்பை வந்து, மகாராஷ்டிர ஆளுநரை சந்திக்க உள்ளனர். அதே நேரத்தில் மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமைக்க பாஜகவும் தயாராகி வருகிறது.
மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கக் கோரி, அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலரும் தற்போது குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
நாங்கள் விரைவில் மும்பை சென்று, ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரியை சந்தித்துப் பேசவுள்ளோம். யாருக்கும் சந்தேகம் வேண்டாம். என்னுடன் வந்துள்ள 50 எம்எல்ஏ.க்களும், சொந்த விருப்பத்தின் பேரில் வந்து மகிழ்ச்சியாக உள்ளனர். நாங்கள் ஒரு குறிக்கோளுடன் வந்துள்ளோம். சுயநலத்துக்காக வரவில்லை. இந்துத்துவா மற்றும் பாலசாகிப் கொள்கையுடன் நாங்கள் வந்துள்ளோம். இவ்வாறு ஷிண்டே கூறினார். ஷிண்டே முதலில் டெல்லி சென்று, பின்னர் மும்பை செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாராகிறது பாஜக
மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் புதிய அரசு அமைப்பதற்கான வியூகத்துடன், பாஜக தயார் நிலையில் உள்ளதாக மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி (எம்விஏ) அரசைக் கவிழ்க்க, பாஜக வியூகம் வகுத்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே, மும்பை வந்து ஆளுநர் பிஎஸ் கோஸியாரியை சந்தித்து, எம்விஏ கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறி, அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவார்.
இல்லையென்றால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி, பாஜகவே ஆளுநர் கோஷ்யாரிடம் கடிதம் கொடுக்கும் மற்றொரு திட்டமும் உள்ளது. இதை ஏற்று ஆளுநர் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால், அதிருப்தி சிவசேனா எம்.பி.க்கள் அவைக்கு வராமல் இருப்பதை பாஜக உறுதி செய்யும். இதன் மூலம் மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி கூட்டணி (எம்விஏ) அரசு நிச்சயம் கவிழும். அவ்வாறு நடந்தால், ஞாயிற்றுகிழமைக்குள் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா விகாஸ் அகாதி கூட்டணியை அரசை கவிழ்ப்பதற்கான வியூகத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, கட்சியின் உத்தரவுக்காக மகாராஷ்டிரா பாஜக தலைமை காத்திருக்கிறது. இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை அளித்த தீர்ப்புக்கு பின்பே வேகம் எடுத்துவிட்டது. உண்மையான சிவசேனா கட்சிக்கு நான்தான் தலைவர் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். அதனால் சிவசேனா அல்லது எம்என்எஸ் கட்சியுடன் இணையும் பேச்சுக்கு இடமில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்காமல் ஆட்சி கவிழ்ந்தால். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்ததாக புதிய சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு அங்கீகாரம் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய அமைச்சர் பதவிகள்
மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று டெல்லி சென்றார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தால், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதல்வர் பதவியும், 2019-ம் ஆண்டு வரை சிவசேனாவுக்கு பாஜக வழங்கியது போல, 12 முக்கிய கேபினட் அமைச்சர் பதவிகளையும் தர பாஜக முன்வந்துள்ளது என பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மும்பை திரும்பி, தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள ஷிண்டே, ‘‘ஒருபுறம் உங்கள் மகன் மற்றும் செய்தி தொடர்பாளர், சிவசேனா தொண்டர்களை பன்றிகள், எருமைகள், நாய்கள், பிணங்கள் என்று கூறுகின்றனர். மறுபுறம் அதே எம்எல்ஏ.க்களை அழைத்து, இந்துக்கு எதிரான மகா விகாஸ் அகாதி கூட்டணியை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?’’ என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT