இந்தியா, ஈரான் இடையே 12 ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

இந்தியா, ஈரான் இடையே 12 ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து
Updated on
2 min read

இந்தியா, ஈரான் இடையே மொத்தம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதில் ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தமும் அடங்கும்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் சென்றடைந்தார். அந்நாட்டு அதிபர் மாளிகைக்கு சென்ற மோடியை பாரம்பரிய முறைப்படி அதிபர் ஹசன் ரவுஹானி வரவேற்றார்.

அப்போது மோடிக்கு ராணுவ இசைக்குழுவினரின் இசை முழங்க இரு நாடுகளின் தேசிய கீதங்களும் பாடப்பட்டன. பின்னர் ராணுவ அணிவகுப்பு மரியாதையை மோடி பார்வையிட்டார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் ஈரான் சென்றிருப்பது இதுவே முதல் முறை.

இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் சுமார் 30 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்தினர். அப்போது, இருதரப்பு கலாச்சார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்துவது, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது உட்பட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதில் வரலாற்று சிறப்பு மிக்க சபஹர் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தத்தில், இந்தியா போர்ட்ஸ் குலோபல் (ஐபிஜிபிஎல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் கே.குப்தா மற்றும் ஈரானின் ஆர்யா பனாதர் நிறுவன நிர்வாக இயக்குநர் இப்ராஹிம் யசேரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சபஹர் துறைமுகத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இரு நாட்டு முனையங்கள் மற்றும் சரக்கு கப்பல் நிறுத்துவதற்கான 5 மையங்களை 10 ஆண்டுகளுக்கு இயக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.

இதன்படி, முதல்கட்டமாக சபஹர் துறைமுகத்தில் முனையங்கள் மற்றும் சரக்கு கப்பல் நிறுத்துமிடங்கள் கட்டுவதற்காக, இந்தியா ரூ.1,300 கோடி நிதியுதவி வழங்கும். இரண்டாவது கட்டமாக, சபஹர் மற்றும் ஜஹிதன் இடையே 500 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைப்பதற்காக சுமார் ரூ.2,000 கோடி வழங்கும்.

பாகிஸ்தான் நிலப்பரப்பு வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க அந்த நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானின் தயவின்றி, கடல் மார்க்கமாக சரக்குகளை ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சரக்குகளை அனுப்பி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகக் கடன், கலாச்சாரம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒத்துழைப்பின் சின்னமாக சபஹர் துறைமுகம் விளங்குகிறது. அத்துடன் பல்வேறு உலக நாடுகளை இணைக்கும் முனையமாகவும் இது செயல்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவு மேலும் வலுவடையும்.

இதுதவிர, தீவிரவாத அச்சுறுத்தல், மத அடிப்படைவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் இணையதள குற்றம் ஆகிய பிரச்சினைகளை எதிர்த்து தொடர்ந்து போரிடுவது என இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

குறிப்பாக, இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்காக, தீவிரவாதம் தொடர்பான உளவு தகவல்களை பகிர்ந்துகொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in