

புதுடெல்லி: கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் முகமது ஜுபைரை விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் கூட்டமைப்பான எடிட்டர்ஸ் கில்டு வலியுறுத்தியுள்ளது.
ஃபேக்ட் செக்கிங்கில் கவனம் ஈர்க்கும் ‘ஆல்ட் நியூஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். ஆல்ட் நியூஸ் நிறுவனமானது, போலிச் செய்திகளைக் கண்டறிந்து அவற்றை அம்பலப்படுத்தும்.
அந்த வகையில் வலதுசாரி செய்தி ஒன்றை ஆல்ட் நியூஸ் நிறுவனம் அடையாளம் கண்டதாகத் தெரிவித்தது. அது தொடர்பாக 2018-ல் முகமது ஜுபைர் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். அந்த ட்வீட் வன்முறையைத் தூண்டுவதாகவும், மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதுதான் அவர் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு திங்கள்கிழமை ஜுபைரை கைது செய்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஜுபைர் கைதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர், “நுபுர் சர்மாவின் பேச்சால் மத வன்முறைகள் நடந்தன. அவர் முஸ்லிம்களின் இறைத் தூதர் முகமது நபியை அவமதித்தார். ஆனால், அவர் இன்னும் கைதாகவில்லை. முகமது ஜுபைர் அவசர அவசரமாகக் கைதாகியுள்ளார். நுபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குப் பிரிவுகளின் கீழேயே முகமது ஜுபைரும் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று கண்டனம் தெரிவித்தார்.
எடிட்டர்ஸ் கில்ட் கண்டனம்: இந்நிலையில், பத்திரிகையாளர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முகமது ஜுபைர் கடந்த சில ஆண்டுகளாக வெகு சிறப்பான செயல்களைச் செய்து வருகிறார். அவரும் அவரது ஆல்ட் நியூஸ் நிறுவனமும் போலிச் செய்திகளை கடந்த சில ஆண்டுகளாக அம்பலப்படுத்தி வருகின்றன. அவை அனைத்தையும் உண்மையின் ஆதாரங்களோடு செய்கின்றன.
உண்மையில் சொல்லப் போனால், அவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். அதன் பின்னர்தான் சம்பந்தப்பட்ட கட்சி தனது நடவடிக்கைகளில் சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்த முகமது ஜுபைரின் கைது கண்டனத்துக்குரியது. இந்த சமூகத்தை போலித் தகவல்கள் மூலம் பிரித்தாள நினைப்பவர்களை கண்டிக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
ஜி7 மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், நாடுகள் வெளிப்படையான பொது விவாதம், சுதந்திரமான ஊடகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியனவற்றை ஊக்குவிப்பேன் என்று தெரிவிக்கப்பட்டது. அதைச் சுட்டிக்காட்டியுள்ள பத்திரிகையாளர் கூட்டமைப்பு, பிரதமர் தாம் அளித்த வாக்குறுதியின்படி முகமது ஜுபைர் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.