சொந்த ஊரில் கோபிநாத் முண்டே உடல் தகனம்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சொந்த ஊரில் கோபிநாத் முண்டே உடல் தகனம்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
Updated on
1 min read

சாலை விபத்தில் மரணமடைந்த மத்திய அமைச்சர் அமைச்சர் கோபிநாத் முண்டேவின் உடலுக்கு, அவரது சொந்த ஊரான லத்தூரில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்,

இதைத் தொடர்ந்து, கோபிநாத் முண்டேவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள அவரது பீட் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் முண்டே கலந்து கொள்ள வேண்டி இருந்தது. இதற்காக மும்பை செல்ல டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் கிளம்பினார் முண்டே. லோதி சாலையில் உள்ள அரசு வீட்டிலிருந்து காலை 6.15 மணிக்கு கிளம்பிய அமைச்சரின் கார் அடுத்த 20 நிமிடத்திற்குள் விபத்துக்குள்ளானது.

உடனடியாக முண்டேவை 3 கி.மீ. தொலைவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது காரிலேயே கொண்டு சென்றனர். அங்கு முண்டேவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு, அவர் அதிர்ச்சி காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு வழியிலேயே இறந்து விட்டார் என காலை 7.45 மணிக்கு அறிவித்தனர்.

பாஜக அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின் முண்டேவின் உடல் நேற்று மாலை விமானம் மூலம் மும்பை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நரிமன் பாயின்ட்டில் உள்ள பாஜகவின் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

பின்னர், இன்று காலை, மும்பையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் லத்தூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக பர்லி கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த கோபிநாத் முண்டேவிற்கு, பிராத்ன்யா என்ற மனைவியும், பங்கஜா, பிரீதம், யஷஸ்ரீ என்ற பிள்ளைகளும் உள்ளனர்.

அவரது உடல் இன்று பிற்பகல் 2 மணி அளவில் அவரது சொந்த ஊரான லத்தூரில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவருக்கான இறுதி சடங்குகளை அவரது மகளும் பாஜக எம்.எல்.ஏவும் ஆன பங்கஜா மேற்கொண்டார்.

64 வயதான முண்டே மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், துணை முதல்வராகவும் இருந்துள்ளார். 1992 முதல் 1995 வரை மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in