

புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுஹாக் நியமனம் என்பது இறுதிசெய்யப்பட்ட ஒன்றுதான் என்றும், ராணுவ நியமனங்களில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வி.கே.சிங்குக்கு எதிராக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம் தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி சர்ச்சை எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து அவையில் விளக்கமளித்த பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, "ராணுவ நியமனங்களில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம். ராணுவ தளபதியாக சுஹாக் நியமிக்கப்படும் முடிவு இறுதியானது" என்றார்.
சர்ச்சையின் பின்னணி
வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும், வட கிழக்கு மாநிலங்கள் விவகாரங்களுக்கான இணை அமைச்சராகவும் இருக்கும் வி.கே.சிங், ராணுவ தளபதியாக பதவி வகித்தபோது, தல்பிர் சிங் சுஹாகிற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை ஒன்றை எடுத்திருந்தார். சுஹாக், ராணுவப் படைகளுடன் ஒரு கிராமத்தை சூறையாடியதாக தல்பீர் சிங் மீது குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், வி.கே. சிங் நடவடிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இணை அமைச்சருக்கு எதிராக அரசே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது சர்ச்சைக்குரியது என காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த பிரமாணப் பத்திரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தனது அமைச்சரவை உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட வி.கே.சிங் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இவ்விகாரம் மோடி அரசுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது அமைச்சருக்கு எதிரான அரசின் நம்பிக்கையின்மையை வெளிப்படையாக இது உணர்த்துகிறது என்றும் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் இன்று மக்களவையிலும் எதிரொலித்தது. வி.கே.சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.