Published : 28 May 2016 10:20 AM
Last Updated : 28 May 2016 10:20 AM

26 ஆண்டுகளில் 20 கின்னஸ் சாதனைகள்: டெல்லியில் வினோத மனிதர்

ஹர் பிரகாஷ் ரிஷி என்பது இயற் பெயர். ஆனால், அவர் தன்னைத் தானே கின்னஸ் ரிஷி என அழைத்துக் கொள்கிறார். காரணம் இல்லாமல் இல்லை. 26 ஆண்டு களில் 20 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். தற்போது 74 வயதாகும் ரிஷி, முதன் முதலில் 1990-ம் ஆண்டு இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரை தொடர்ந்து 1001 மணி நேரம் ஓட்டியதற்காக கின்னஸ் சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து புதுடெல்லி யில் இருந்து சான் பிரான்ஸிஸ்கோவுக்கு பிட்ஸா டெலிவரி செய்திருக்கிறார். ஒரு பாட்டில் தக்காளி கெட்ச்அப்-ஐ நான்கு நிமிடங்களுக்குள் குடித்திருக்கிறார். குளிர்பானங்கள் அருந்த உதவும் ஸ்ட்ராக்களை வாயில் வைத்து சாதனை படைப்பதற்காக தனது பற்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டார். எரியும் 50 மெழுகுவர்த்திகளை வாயில் வைத்துக் கொண்டு ஒரு சாதனை.

366 கொடிகளை உடலில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக 500-க்கும் மேற்பட்ட படங்களை உடலில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். இப்படி 20-க்கும் மேற்பட்ட கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார் ரிஷி. வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வரும் ரிஷி, தான் செய்தவற்றிலேயே வாயில் ஸ்ட்ராக்களை வைத்திருந்ததுதான் மிகக் கடினமானது என தெரிவித்துள்ளார்.

“496 ஸ்ட்ராக்களை வாயில் வைத்திருந்து உலக சாதனை படைத்துள்ளேன். அதற்காக வாயில் அதிக இடம் தேவைப்பட்டது. எல்லா பற்களையும் அகற்றி விட்டேன்” என்றார் அவர்.

தற்போது, உடலில் ஒபாமா, மோடி, ராணி எலிஸபெத், காந்தி என உலகத் தலைவர்களின் உருவப்படங்களை பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். ஹர் பிரகாஷ் ரிஷியின் மனைவி பிம்லா ரிஷியும் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். 1991-ம் ஆண்டில் ‘ஆல் டூ சன்’ என ஆங்கிலத்தில் 8 எழுத்துகளில் எழுதி உலகில் மிகக் குறைந்த எழுத்துகளில் எழுதப்பட்ட உயில் எழுதியவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் பிம்லா.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x