Published : 27 Jun 2022 05:24 AM
Last Updated : 27 Jun 2022 05:24 AM

6 மாநில இடைத் தேர்தல் முடிவுகள்: உ.பி, திரிபுராவில் பாஜக வெற்றி; பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி தோல்வி

புதுடெல்லி: பஞ்சாப், உத்தர பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகளுக்கும், 7 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நடந்த இடைத் தேர்தலில் பா.ஜ 2 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வென்றது. காங்கிரஸ் ஜார்கண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவை தொகுதியில் வென்றது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் ராஜினாமா செய்த சங்ரூர் மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக, ராம்பூர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும், அசம்கர் மக்களவை தொகுதி எம்.பி பதவியை மூத்த தலைவர் அசம் கானும் ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சமாஜ்வாதியின் கோட்டையாக இருந்து ராம்பூர் தொகுதியில் பா.ஜ வேட்பாளர் கான்ஷ்யாம் லோதி 42,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் அசிம் ராஜாவை தோற்கடித்தார்.

அசம்கர் தொகுதியிலும் பா.ஜ வேட்பாளர் தினேஷ் லால் யாதவ், சமாஜ்வாதி வேட்பாளர் தர்மேந்திர யாதவை வென்றார்.

பஞ்சாபில் ஆம் ஆத்மி தோல்வி

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதை அடுத்து பக்வந்த் மான் முதல்வராக பதவியேற்றார். இதனால் அவர் சங்ரூர் லோக்சபா தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அந்த தொகுதிக்கு கடந்த 23-ம் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளியிடப்பட்டன. இதில், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசர்) கட்சியின் வேட்பாளர் சிம்ரஞ்ஜித் சிங் மன் 5,000 ஓட்டு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கு ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்தை பிடித்தது.

சங்ரூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கடந்த சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பஞ்சாப்பில் ஆட்சி அமைத்து 4 மாதம் ஆன நிலையில், முதல்வர் ராஜினாமா செய்த தொகுதியில் ஆம் ஆத்மி தோல்வியை சந்தித்தது அக்கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

திரிபுராவில் பா.ஜ.க அமோகம்

திரிபுராவில் ஜூபாரஜ்நகர், டவுன் பர்தோவாலி, அகர்தலா, சுர்னா ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில், அகர்தலாவில் மட்டும் காங்கிரஸ் வென்றது. மற்ற 3 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. திரிபுரா முதல்வர் மானிக் சாகா டவுன் பர்தோலி தொகுதியில் 6,104 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அகர்தலாவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் 3,163 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஜுபாரஜ் நகர்தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் மலினா தேவ்நாத் வென்றார். சுர்மா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்வப்னா தாஸ் 4,583 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி

டெல்லி ராஜிந்தர் நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் துர்கேஷ் பதக் 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் ராஜேஷ் பாட்டியாவை தோற்கடித்தார்.

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் வெற்றி

ஜார்கண்ட் மந்தர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ பாந்து திர்கே, ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாந்து திர்கேவின் மகள் ஷில்பி நேகா திர்கே-வை காங்கிரஸ் கட்சி ஆளும் ஜேஎம்எம் தலைமையிலான கூட்ட ணியின் பொது வேட்பாளராக நிறுத்தியது. இதில் அவர் சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங். வெற்றி

ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கவுதம் ரெட்டி இறந்ததையடுத்து, அவரது அத்மகுர் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் கவுதம் ரெட்டியின் இளைய சகோதாரர் விக்ரம் ரெட்டி 82,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவேட்பாளர் பரத் குமாரை தோற்கடித்தார்.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் ராஜினாமா செய்த சங்ரூர் மக்களவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x