Published : 20 May 2016 10:43 AM
Last Updated : 20 May 2016 10:43 AM

வடகிழக்கு மாநிலங்களில் முதல் முறையாக அசாம் மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக

அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.

அசாமில் 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. மேலும் அசாம் கண பரிஷத், போடோ மக்கள் முன்னணி மற்றும் இதர பழங்குடியின குழுக்களை கூட்டணியில் சேர்த்து வானவில் கூட்டணியாக களமிறங்கியது.

அசாமில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 80 வயதான முதல்வர் தருண்கோகோயை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தது. சட்டவிரோத வங்கதேச குடியேற்றத்தை காங்கிரஸ் கண்டுகொள்ளாமல் விட்டது காங்கிரஸ் மீது உள்ளூர் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை பாஜக வலுவாகப் பிடித்து பிரச்சாரத்தில் இறங்கியது. மேலும் அஹோம், போடோ, ரபா, கியாத், மிஷிங், வட இந்தியர்கள், வங்காளிகள் என பல்வேறு சமூகத்தவரையும் இணைத்து களம் கண்ட பாஜகவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக தனித்து 60 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸுக்கு 26 இடங்களே கிடைத்துள்ளன. மேலும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அசாம் கண பரிஷத் 14 இடங்களிலும், போடோலாந்து முன்னணி 12 இடங்களிலும் வென்றுள்ளன.

தற்போதைய சட்டப்பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கிய அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 13 இடங்களே கிடைத்துள்ளன. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் முன்னணி பெற்றுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் முதல்முறையாக அசாமில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.

தொங்கு சட்டசபை அமைந்தால் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் எனக் கருதப்பட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பஹ்ருதீன் அஜ்மல் 16,723 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் வாஜெத் அலி சவுத்ரியிடம் படுதோல்வியடைந்துள்ளார்.

முதல்வர் அருண் கோகோய் பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். பாஜகவின் முதல்வர் வேட்பாளர் சர்பானந்த சோனோவால் 18,923 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்தார்.

அசாம் கணபரிஷத் தலைவர் அதுல் போரா 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

அமைச்சர்கள் கவுதம் ராய், எடுவா முண்டா தோல்வியடைந்தனர். அதே சமயம், அமைச்சர்கள் சரத் பர்கோடோகி, சித்திக்கி அகமது, பிஸ்மிடா கோகோய், சுமித்ரா பாடிர், சந்தன் சர்கார், அஜித் சிங், பஸந்த தாஸ், கிரிந்திர மாலிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

உண்மையான குடிமக்களை பாதுகாக்க உறுதி

அசாமின் உண்மையான குடிமக்களைப் பாதுகாப்போம் என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள பாஜகவின் சர்பானந்த சோனோவால் உறுதியளித்துள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் எங்கள் வெற்றிக் கூட்டணியை ஏற்றுக் கொண்டனர். இது மிகப்பெரும் வெற்றி. இந்துவோ, முஸ்லிமோ அது யாராக இருப்பினும் உண்மையான இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முதன்மையான நோக்கம். அசாமிகள், பிஹாரி மார்வாடிகள், வங்காளிள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என அசாமிய சமூக மக்களின் நலன்களைப் பாதுகாப்போம். நாம் ஒன்றாக இணைந்து பணிபுரிவோம். வங்கதேச முஸ்லிம்களின் சட்டவிரோத குடியேற்றம், வேலையின்மை ஆகியவை நம்முன் இருக்கும் சவால்கள். நாம் ஒன்றாக இணைந்து போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி வாழ்த்து

அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வரும், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்பானந்த சோனோவால் கூறுகையில், “15 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீழ்த்தி, பாஜகவை வெற்றி பெற வைத்த அசாம் மக்களுக்கு தனது நன்றியை தெரிவிக்குமாறு, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் ஆதரவு தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். எனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு, நானும் நன்றி தெரிவித்தேன்’’ என்றார். முன்னதாக, அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று மோடி குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x