Last Updated : 13 May, 2016 03:37 PM

 

Published : 13 May 2016 03:37 PM
Last Updated : 13 May 2016 03:37 PM

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: சாத்வி மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டது என்ஐஏ

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக சாத்வி பிரக்யா தாக்கூர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் பெயர் களை குற்றப்பத்திரிகையில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று நீக்கியது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது ரம்ஜான் தொழுகையை முடித்துவிட்டு வெளியே வந்தவர்களில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சதியில் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இவ்வழக்கை விசாரித்த மும்பையின் தீவிரவாத தடுப்பு பிரிவு சாத்வி பிரக்யா தாக்கூர் உட்பட 14 பேர் மீது 2009-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேலும் மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் கீழும் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் 2011-ல் இவ்வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ சார்பில் சிறப்பு நீதிபதி எஸ்.டி.டேக்காலே முன்னிலையில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இவ்வழக்கில் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் 5 பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தொடர்வதில் எந்த நியாயமும் இல்லை. மேலும் மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் லெப்டினென்ட் கர்னல் பிரசாத் காந்த் புரோஹித் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்வதற்கும் எந்த முகாந்திரமும் இல்லை’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து சாத்வி பிரக்யா தாக்கூர் உட்பட குற்றவாளிகள் அனைவரும் விரைவில் விடுதலை யாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஐஏவின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறும்போது, ‘‘பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் தீவிரவாத வழக்குகளில் சிக்கிய சங்பரிவார் தொண்டர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் என ஏற்கெனவே நான் கணித்திருந்தேன். அது தான் தற்போது நடந்துள்ளது. என்ஐஏ இயக்குநர் ஜெனரல் எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்’’ என்றார்.

அதே சமயம் இந்த குற்றச் சாட்டுக்களை மத்திய அரசு முற்றி லும் மறுத்துள்ளது. என்ஐஏ விசாரணையில் அரசு தலையிட வில்லை என்றும் விசாரணை அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி யுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x