Last Updated : 18 May, 2016 02:49 PM

 

Published : 18 May 2016 02:49 PM
Last Updated : 18 May 2016 02:49 PM

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: குற்றம்சாட்டப்பட்டவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பிப்ரவரி 2002-ல் 59 கரசேவகர்கள் கொல்லப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட பரூக் மொகமது பானா என்பவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இவர் கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்தார். முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பரூக் மொகமது சம்பவத்துக்குப் பிறகு மும்பையில் ரியல் எஸ்டேட் தரகராக இருந்து வந்தது தெரியவந்தது என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “பரூக் மொகமது பானா இன்று மும்பையிலிருந்து கோத்ரா செல்லும் போது, பஞ்சமஹால் மாவட்டத்தின் கலோல் நகருக்கு அருகே சுங்கச்சாவடியில் பிடிபட்டார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் இவர் முக்கியக் குற்றவாளி” என்றார்.

இவர் மீது போலீஸ் குற்றப்பத்திரிக்கையில், முன்னாள் முனிசிபல் கவுன்சிலரான பரூக் பானா பிப்ரவரி 22, 2002-ல் விருந்தினர் மாளிகை ஒன்றில் 20 பேருடன் சேர்ந்து சபர்மதி விரைவு ரயிலின் எஸ்.6-ம் எண் பெட்டியை எரிக்க கூட்டு சதியில் ஈடுபட்டார், மவுலானா உமர்ஜி என்பவரது ஆணைகளுக்கு இணங்க ரயில் எரிப்பு சதி நிறைவேற்றப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட மவுலான உமர்ஜி கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் எதிரொலியாக குஜராத்தில் பயங்கர வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x