Published : 26 Jun 2022 07:35 AM
Last Updated : 26 Jun 2022 07:35 AM

குஜராத் கலவர வழக்கு தீர்ப்பு | 19 ஆண்டாக வேதனைகளை மனதில் புதைத்து கொண்டார் மோடி - அமித் ஷா கருத்து

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் உண்மை, பொன்னை போன்று மின்னுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவர வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு, "பிரதமர் மோடி குற்றமற்றவர்" என்று நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. எனினும் கடந்த 19 ஆண்டுகளில் அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. சிவபெருமான் விஷத்தை விழுங்கி தொண்டையில் நிறுத்தியது போன்று, பிரதமர் மோடி அனைத்து வேதனைகளையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டார். ஒரு தொண்டு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதை குஜராத் அரசு எதிர்க்கவில்லை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்மூலம் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு தொண்டு நிறுவனம், ஒரு கட்சி ஆகியவை இணைந்து பொய்களை பரப்பியது தெரியவந்துள்ளது.

அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, கலவரத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கோத்ரா ரயில் எரிப்பில் 60 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தாயின் மடியில் அமர்ந்திருந்த 16 வயது சிறுமியும் தீயில் எரிந்து மடிந்தார். எனது கைகளால் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்தேன்.

வழக்கு தொடர்ந்த ஜகியா ஜாப்ரி, யாரோ ஒருவரின் தூண்டுதலின்பேரில் செயல்படுகிறார் என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. நரேந்திர மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தீஸ்தா சீதல்வாட் தொண்டு நிறுவனத்துக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பல்வேறு வகைகளில் உதவி செய்தது. இதை யாராலும் மறுக்க முடியாது.

பொய்யை தோல் உரித்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது முக்கியமானது. அந்த வகையில் குஜராத் கலவர வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் உண்மை, பொன்னை போன்று மின்னுகிறது. இது ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் பெருமிதமான தருணம். பிரதமர் மோடிக்கு எதிராக குற்றம் சாட்டியவர்கள் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தீஸ்தா கைது

குஜராத் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகளை தொடுத்த சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் போலீஸார் மும்பையில் நேற்று கைது செய்தனர். சிறப்பு புலனாய்வு குழுவில் தவறான தகவல்களை அளித்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். குஜராத்தின் அகமதாபாத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தப்படுகிறது.

நள்ளிரவில் உரிமைகளை பறித்த காங்.

இந்தியாவில் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். 1977 மார்ச் மாதம் வரை சுமார் 19 மாதங்கள் இந்த அவசர நிலை நீடித்தது. இன்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட 47-வது நினைவு நாள் ஆகும். இதனையொட்டி அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

1975-ம் ஆண்டில் இதே நாளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, நாட்டு மக்களுக்கான அரசியல் சாசன உரிமைகளைப் பறித்தது. அடக்குமுறைகளில் அந்நிய ஆட்சியை காங்கிரஸ் அரசு விஞ்சியது. அவசர நிலைக்கு எதிராகப் போராடி நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுத்த தலைவர்களுக்காக நான் இன்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன். அவர்கள்தான் சர்வாதிகாரி மனப்பான்மையை தோற்கடித்தனர்.

ஒரு குடும்பத்துக்கு எதிரான குரல்களை அடக்குவதற்காக விதிக்கப்பட்ட அவசரநிலை சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். 21 மாதங்கள் இரக்கமற்ற ஆட்சியின் கொடூரமான சித்ரவதைகளை அனுபவித்து, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் பாதுகாப்புக்காக இடைவிடாது போராடிய அனைத்து நாட்டு மக்களின் தியாகத்துக்கும் எனது வணக்கம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x