Published : 26 Jun 2022 04:17 AM
Last Updated : 26 Jun 2022 04:17 AM

குடியரசுத் தலைவர் தேர்தல் - யஷ்வந்த் சின்ஹாவுக்கு சந்திரசேகர ராவ் ஆதரவு

சந்திரசேகர ராவ்

ஹைதராபாத்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், எதிரணி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாத தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவுதர டிஆர்எஸ் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்துள்ளார்.

நாளை (ஜூன் 27) யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது, டிஆர்எஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகிய இருவர் பங்கேற்க உள்ளனர். வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்ஹா ஹைதராபாத் வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் இல்லாமல், தனியாக அவரை கே.சந்திரசேகர ராவ் சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் பேச்சு

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹா நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுடனும் சின்ஹா தொலைபேசியில் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தான் அறிவிக்கப்பட்டபோது, அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அளித்த உறுதியை நினைவுகூர்ந்தார்.

பாஜக மூத்த தலைவரும் தனது வழிகாட்டியுமான எல்.கே.அத்வானியுடனும் சின்ஹா பேசினார்.

அதேவேளையில், தன்னை பொது வேட்பாளராக தேர்வு செய்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், “குடியரசுத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்கள் மற்றும் வழிகாட்டும் லட் சியங்களை பயமோ தயவோ இல்லாமல் மனசாட்சியுடன் நிலைநிறுத்துவேன் என்று உங்களுக்கும், இந்திய மக்களுக்கும் உறுதி அளிக்கிறேன். உங்கள் ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெறுவதற்காக உங்களையும் உங்கள் கட்சி எம்.பி., எம்எல்ஏக்களையும் விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா வரும் திங்கள்கிழமை முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, முடிந்தவரை பல மாநிலத் தலைநகரங்களுக்குச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா ஜார்க்கண்டில் நேற்று முன்தினம் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தங்கள் சமூகத்தை சேர்ந்த, பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு பக்கம் சாய்வதாக தெரியவந்ததால், அதை தாமதப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திரவுபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று லக்னோவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க பகுஜன் சமாஜ் கட்சி முடிவு செய்துள்ளது. எங்கள் கட்சியின் இயக்கத்தில் ஆதிவாசி சமாஜ் முக்கியப் பங்கு வகிப்பதை மனதில் கொண்டு, அவருக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

இந்த முடிவு பாஜக அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றோ அல்லது எதிரணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்றோ எடுக்கப்படவில்லலை. ஆனால் திறமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு ஆதிவாசிப் பெண்ணை நாட்டின் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற எங்கள் கட்சி மற்றும் அதன் இயக்கத்தை மனதில் கொண்டு எடுக்கப்பட்டது. இவ்வாறு மாயாவதி கூறினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x