Published : 26 Jun 2022 04:39 AM
Last Updated : 26 Jun 2022 04:39 AM
மும்பை: சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேருக்கு நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பிய மகாராஷ்டிரா துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வல், நாளை மாலைக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சுயேச்சை எம்எல்ஏ.க்கள் சிலர் ஆதரவுடன் அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதையடுத்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்யும்படி மகாராஷ்டிர துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வலிடம், சிவசேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதன்படி, ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்எல்ஏக்களுக்கு துணை சபாநாயகர் நேற்று தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார். அதில், கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? கட்சிக்கு விரோதமாக செயல்படும் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது? போன்ற கேள்விகளுக்கு நாளை மாலைக்குள் பதில் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை சபாநாயகர் மீது, இரு சுயேச்சை எம்எல்ஏ.க்கள் மகேஸ் பால்டி, வினோத் அகர்வால் ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இது நிலுவையில் இருப்பதால், தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்ப துணை சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என ஏக்நாத் ஷிண்டே கூறியிருந்தார். இந்நிலையில், துணை சபாநாயகருக்கு எதிரான நோட்டீஸ் நேற்று காலை தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின், சிவசேனா கட்சியின் 16 அதிருப்தி எம்எல்ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை துணை சபாநாயகர் அனுப்பினார்.
விரும்புவோர் வெளியேறலாம்
சிவசேனா தொண்டர்களிடையே காணொலி மூலம் முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு பேசியதாவது:
சிவசேனா தொண்டர்கள் என்னுடன் இருப்பதால், மற்றவர்களின் விமர்சனம் பற்றி நான் கவலைப்படவில்லை. சிலர் போட்டியிட நாம் சீட் வழங்கினோம். உங்கள் கடின உழைப்பால் வெற்றி பெற்றபின், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாஜகவுடன் கூட்டு சேர விரும்பும் எம்எல்ஏ.க்களை அழைத்து வாருங்கள், நாம் பேசுவோம் என ஏக்நாத் ஹிண்டேவிடம் கூறினேன். பாஜக நம்மை மோசமாக நடத்தியது. வாக்குறுதிகளை மதிக்கவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் மீது வழக்குகள் உள்ளன. அவர்கள் பாஜகவுடன் சென்றால் வழக்கில் இருந்து தப்பலாம். நம்முடன் இருந்தால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி தருவதாக இருந்தால், அவர் பாஜகவுடன் செல்லலாம். துணை முதல்வர் பதவிக்காக இந்த நடவடிக்கை என்றால், நானே அவரை துணை முதல்வராக்க முடியும். கட்சியை என்னால் நடத்த முடியவில்லை என சிவசேனா தொண்டர்கள் கருதினால், நான் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக தயார்.
தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் எம்எல்ஏ.க்கள் பலர் மகிழ்ச்சியாக இல்லை. அதிருப்தியாளர்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. கட்சியை விட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம். நான் புதிய சிவசேனாவை உருவாக்குவேன். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
பழிவாங்கும் நடவடிக்கை
குவாஹாட்டியில் நேற்று ஏக்நாத் ஷிண்டே, ‘‘மகாராஷ்டிர எம்எல்ஏ.க்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு, சட்டவிரோதமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. எங்கள் குடும்பத்துக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு உத்தவ் தாக்கரே, சரத் பவார், அமைச்சர் ஆதித்ய தாக்கரே, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோர்தான் பொறுப்பு’’ என்றார். இந்த குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் திலிப் வால்சே பாட்டீல் மறுத்துள்ளார். ஆனால், சஞ்சய் ராவத் கூறும்போது, ‘‘எம்எல்ஏ.க்களுக்குத்தான் பாதுகாப்பு அளிக்க முடியும். அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது’’ என்றார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தங்கள் குழுவுக்கு ‘சிவசேனா பாலசாஹிப்’ என பெயர் சூட்டியுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, ‘‘பாலசாஹிப் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது’’ என்றார்.
சிவசேனா எம்.பி. சஞ்ய் ராத் ட்விட்டரில் விடுத்த செய்தியில், ‘‘அதிருப்தி எம்எல்ஏ.க்கள் திரும்பி வரவில்லையெனில், சிவசேனா தொண்டர்கள் இன்னும் தெருவுக்கு வரவில்லை. வந்தால் தீப்பற்றி எரியும்’’ என மிரட்டல் விடுத்தார்.
இதற்கிடையில், புனேவில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ தனாஜி சாவந்த் அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் நேற்று அடித்து நொறுக்கினர். இதையடுத்து, சிவசேனா தலைவர்களின் அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீஸாருக்கு புனே காவல் தலைமையகம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோல, தானே மாவட்டத்தில், ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், கல்யான் தொகுதி எம்.பி.யுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் அலுவலகத்தையும் சிவசேனா தொண்டர்கள் சூறையாடினர்.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மும்பை போலீஸார் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, மும்பையில் சர்ச்சைக்குரிய போஸ்டர்கள், பேனர்கள் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்தது என்ன?
சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஏக்நாத் ஷிண்டேவின் அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து அவர் நீதி மன்றத்தில் மனு செய்யலாம். இதில் தீர்வு கிடைக்க நீண்ட காலம் ஆகும். இல்லையென்றால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தக் கோரி, ஆளுநருக்கு கடிதம் எழுதலாம். ஆனால், இதிலும் சிக்கல் உள்ளது. கட்சித் தாவல் சட்டத்தின் கீழ், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவினர், ஏதாவது ஒரு கட்சியுடன் 3-ல் இரண்டு பங்கு எம்எல்ஏ.க்களுடன் இணைய வேண்டும்.
பாஜகவுடன் இணைந்தால், சிவசேனா கட்சிக்கு ஆபத்து. அல்லது சுயேச்சை எம்எல்ஏ பாச்சு கூடுவின் பிரகார் ஜனசக்தி கட்சியுடன் ஷிண்டே அணியினர் இணையலாம். சிவசேனா கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் தங்கள் அணிக்கு வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தை ஏக்நாத் ஷிண்டே அணுக கூடிய வாய்ப்பும் உள்ளது. அதுவும் இல்லையென்றால் உத்தவ் தாக்கரேவுடன் சமரசத்துக்கான வாய்ப்பு ஒன்று மட்டும்தான் உள்ளது. ஆனால் தற்போது இருதரப்பினர் இடையே நிலவும் சூழலைப் பார்க்கும் போது, சமரசத்துக்கான வாய்ப்பு ஏற்படாது என்றே தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT