

ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாநில சட்டமன்றத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: “ரயில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு முன்பு தாங்கள் கூறும் அறிவுரைகளை, ஆட்சிக்கு வந்ததும் கட்சிகள் பின்பற்றுவதில்லை.
தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நல்ல காலம் பிறக்கும் என்று கூறிய கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின்பு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தால், அது தொடர்பாக முன்னதாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.
நான் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, சாமானியர்களை பாதிக்கும் என்பதால் பயணிகள், சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எடுக்கவில்லை.
வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை முழுவதுமாக வாபஸ் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
ரயில் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் அனைத்துப் பொருள்களின் விலை உயரும். இது சாமானியர்களை பாதிக்கும். ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைய எங்களின் எதிர்ப்பால், நாங்கள் மத்திய அரசுக்கு எதிரானவர்கள் என்று கருத வேண்டாம்” என்றார் மம்தா.
வாபஸ் பெறுங்கள்
ரயில் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநில சட்டமன்றத்தில் உம்மன் சாண்டி பேசியதாவது: “மக்களின் சிரமத்தை உணர்ந்து ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூடுதல் விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன்” என்றார்.