'பாஜகவுக்கான ஆதரவு கிடையாது இது' - திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கிய மாயாவதி

'பாஜகவுக்கான ஆதரவு கிடையாது இது' - திரவுபதி முர்முவை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்கிய மாயாவதி
Updated on
1 min read

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு (64), தனது வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவை தெரிவித்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அவருக்கு ஆதரவு அளித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக திரவுபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இதுவரை பாஜகவோடு இணையாமல், அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் இருந்துவந்த பகுஜன் சமாஜ் கட்சி திடீரென திரவுபதி முர்முவை ஆதரிக்க போவதாக தெரிவித்தது. ஆதரவுக்கு மாயாவதி விளக்கமும் கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் கட்சியின் ஓர் அங்கமாக பழங்குடி சமூகம் இருப்பதை மனதில் வைத்து திரவுபதி முர்முவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம். எனினும், இது பாஜகவுக்கோ, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கோ ஆதரவாகவும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் எடுக்கப்பட்ட முடிவு கிடையாது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான முடிவுகளையே எங்கள் கட்சி எடுத்துவருகிறது. நாட்டில், பட்டியலினத்தவருக்குத் தலைமை தாங்கும் ஒரே தேசிய கட்சி என்றால் அது பகுஜன் சமாஜ் மட்டுமே" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in