

தொலைக்காட்சி சேனல் பேட்டி ஒன்றில் டெல்லி போலீஸைச் சுட்டுமாறு அரவிந்த் கேஜ்ரிவால் ‘துல்லா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக அவர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தொலைக்காட்சி நேர்காணலில் டெல்லி போலீஸைக் குறிக்க ‘துல்லா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார், இந்த வார்த்தை டெல்லி போலீஸை அவமதிக்கும் சொற்பிரயோகம் என்று கோவின்புரி காவல் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையில் இன்று நீதிபதி கூறும்போது, “அனைத்து டெல்லி போலீஸும் ‘துல்லா’ என்று கேஜ்ரிவால் குறிப்பிடவில்லை. இது ஒரு குறிப்பிட்ட தனிநபர் மீதோ, அல்லது போலீஸ் துறை மீதோ கூறப்பட்ட வார்த்தை அல்ல. மாறாக வேலையில் கவனம் செலுத்தாத போலீஸ் அதிகாரிகளைக் குறிப்பிட பயன்படுத்திய சொல் என்பது தெளிவாக இருக்கிறது.
இன்னும் குறிப்பாக கூற வேண்டுமென்றால் நடைபாதை வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் போலீஸ்காரர்களையே அவர் குறிப்பிட்டுள்ளதாக தெளிவாகத் தெரிகிறது. அதாவது அடையாளப்படுத்த முடியாத, நிர்ணயிக்க முடியாத ஊழல் போலீஸ் அதிகாரிகளையே அவர் துல்லா என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அவரை இதற்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப போதிய அடிப்படைகள் இல்லை” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.