Published : 24 Jun 2022 06:20 AM
Last Updated : 24 Jun 2022 06:20 AM

அக்னிபாதை... சரியான பாதை - முப்படைகளை எதிர்காலத்திற்கு தேவையான முறையில் மாற்றியமைக்கும்

திருவண்ணாதபுரம் இராமகிருஷ்ணன்

முப்படைகளுக்கு 46 ஆயிரம் அக்னிவீரர்களை நியமிக்க வகை செய்யும் அக்னிபாதை திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான 2 நாட்களில், இதற்கு எதிராக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. எதனால் இந்தப் போராட்டம் என்பதை பார்ப்பதற்கு முன் மத்திய அரசாங்கமும் முப்படைகளும் எதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தது என்பதை பார்ப்போம்.

இளமையான, துடிப்பான, சுறுசுறுப்பான மற்றும் போர் தொழில்நுட்பத்தை வேகமாக புரிந்துகொள்கிறவர்களை முப்படைகளும் விரும்புவதால்தான் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது என மத்திய அரசு தெளிவாகக் கூறியுள்ளது. இன்றைய இந்தியாவின் முப்படை வீரர்களின் சராசரி வயது 31. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இது ஏறத்தாழ 25 ஆக இருக்கிறது. இந்த திட்டத்தால் வீரர்களின் சராசரி வயது 4 முதல் 5 ஆண்டுகள் வரை குறையும். வீரர்கள் அடிப்படையில் மட்டுமல்லாது வயது அடிப்படையிலும் பிரமிடு போன்றதுதான் முப்படை. அரசு ஊழியர்களின் சராசரி வயது 40 ஆக இருந்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கோ ஒருமைப்பாட்டுக்கோ அபாயகரமானதாக இருக்காது. ஆனால், முப்படைகளுக்கு இது பொருந்தாது.

அத்துடன் போர் முறை என்பது இணையவழி (Cyberwar) உள்ளிட்ட பல்வேறு வகைகளைக் கொண்டது. 20 வயதுகளின் தொடக்கத்தில் உள்ள இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கையாளவும் இணையவழி போரை எதிர்கொள்ளவும் உரிய பயிற்சியை எளிதாக வழங்க முடியும். இவர்களை விட 15 வயது கூடுதலாக உள்ளவர்களுக்கு புரியவைப்பது சிரமம். உலகம் முழுவதும் உள்ள முப்படைகளின் இப்போதைய கட்டமைப்பை புரிந்து கொண்டவர்களும் போர் தந்திரங்கள் அவ்வப்போது மாறும் என்பதை உணர்ந்தவர்களும் அரசு மற்றும் முப்படைகளின் புதிய திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப மாட்டார்கள்.

பின்னர் அக்னிபாதை திட்டம் குறித்து முப்படைகளில் சேர விரும்பும் இளைஞர்கள் ஏன் அச்சப்படுகிறார்கள்? இந்த திட்டத்தில் சேர 17.5 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக முப்படைகளில் சேர்வதற்காக காத்திருக்கும் இளைஞர்கள், 21 வயதைக் கடந்துவிட்டதால் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இதையடுத்து, இந்த ஆண்டு மட்டும் வயது வரம்பை 23 ஆக உயர்த்தி அச்சத்தைப் போக்கியிருக்கிறது மத்திய அரசு.

இப்போது முப்படைகளில் சேர்பவர்கள் 18 ஆண்டுகள் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு விரும்பினால் தொடரலாம். ஆனால் அக்னிபாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் அக்னிவீரர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அதன் பிறகு 25 சதவீத வீரர்கள் மட்டுமே நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு அடுத்து என்ன என்ற பயத்திற்கு தீர்வாக, மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த 2 படைகளில் மட்டும் சுமார் 3 லட்சம் வீரர்கள் பணிபுரிகிறார்கள். இதன்படி பார்த்தால் 4 ஆண்டு பணியை முடித்துவிட்டு முப்படைகளில் இருந்து விடுவிக்கப்படும் அனைத்து வீரர்களுக்கும் இந்த 2 படைகளிலே வேலை கிடைத்துவிடும். இதுதவிர, காவல் துறையில் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பல்வேறு மாநில அரசுகள் உறுதி அளித்துள்ளன. எனவே முப்படை பணியை முடித்த பிறகு அக்னிவீரர்களுக்கு வேலைக்குப் பஞ்சமில்லை.

பிறகு என்ன மாதிரியான இளைஞர்களின் எதிர்பார்ப்பை அக்னிப்பாதை திட்டம் பூர்த்தி செய்யவில்லை என்பதையும் பார்த்தாக வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நிர்வாகம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் விரிவடையத் தொடங்கியது. இதனால் மத்திய மற்றும் மாநில அளவில் பொதுத் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. நேரு, இந்திரா ஆட்சியில் பல தனியார் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் காரணமாக 1960, 70, 80-களில் அரசு வேலை அதிகரித்தது. அதேநேரம் உரிமம் மற்றும் ஒதுக்கீடு (License and Quota) காரணமாக தனியார் துறை வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. இதன் காரணமாக அன்றைய காலகட்டத்தில் அரசு வேலை வாய்ப்பே முக்கிய எதிர்பார்ப்பாக இளைஞர்களிடம் இருந்தது. 1990-களுக்குப் பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. அரசு அமைப்புகள் அத்தியாவசியமற்ற பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பெறத் தொடங்கின. இதனால், சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்கான செலவு மட்டுப்பட்டது.

ஊழியர்கள் நேரத்தைக் கொடுக்க அதற்குப் பதிலாக ஊதியம் பெற்றுக்கொள்ளலாம் (Salary for time) இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய வழிமுறை இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சிறிது சிறிதாக விலகத் தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் நேரத்திற்கு மாற்றாக ஊதியம் என்பது போய், செய்யும் வேலைக்கு ஊதியம் (Salary for work) என்ற நிலை முழுமையாக வர இருக்கிறது. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வேலைகளின் தன்மைகளை மாற்றிக்கொண்டே இருக்கப்போகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு நிறுவனத்தில் ஒரு வேலையில் இருபது வயதுகளில் சேர்ந்து ஓய்வு பெறும் வயது வரை அதே வேலையை செய்து கொண்டு இருக்கலாம் என்ற இருபதாம் நூற்றாண்டில் நிலை பெற்றுவிட்ட நியதி இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உடைந்து வருகிறது.

இதன் காரணமாக ஊழியர்களை ஓய்வு பெறும் காலம் வரை வேலையில் வைத்துக்கொள்வது என்பது எந்த ஒரு அமைப்பிற்கும் நடவாத காரியம். தனியார் துறையில் தேவைக்கேற்ப ஊழியர்களை எப்போது வேண்டுமானாலும் நியமிக்கவோ, பணியிலிருந்து விடுவிக்கவோ முடியும். ஆனால், அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஓய்வுபெறும் வரை அவர்களை வைத்திருக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாகவே அனைத்து அமைப்புகளும் குறுகிய காலத்திற்கு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியிருக்கிறது. அல்லது அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் நிரந்தர ஊழியர்களாக வைத்துக்கொண்டு அத்தியாவசியமற்ற பணிகளை பிற நிறுவனங்கள் (Outsourcing) மூலம் பெறுகின்றன. இதே வழிமுறையைத்தான் மற்ற நாடுகளை போலவே இந்திய முப்படைகளும் பின்பற்ற விரும்புகின்றன.

பிரச்சினை என்னவென்றால், இந்திய முப்படையில் சேர்ந்து பணிபுரிய விரும்பும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை புரிந்துகொள்ளவில்லை. இவர்களில் பெரும்பாலோர் அரசு சார்ந்த பணியிடங்களை இதுவரை பெற்றிராத குடும்பங்களைச் சார்ந்தவர்கள். அரசு சார்ந்த வேலை தரும் பணிப் பாதுகாப்பு, சமூக அந்தஸ்து, ஒரே நிறுவனத்தில் மாறுபாடில்லாத வாழ்க்கை ஆகியவற்றை கண்டிராதவர்கள் என்பதாலே அரசு சார்ந்த நிரந்தர வேலை முன்பு மாதிரியே இருக்கப் போகிறது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள். முப்படைகளில் 18 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஓய்வூதியத்துடன் கூடிய இன்னொரு தொழிலையும் மேற்கொள்ளலாம் என்று நினைத்திருந்தவர்கள். அந்த காலம் மலையேறி விட்டது என்பதை புரிந்து கொள்ளாததால் வரும் விரக்தியின் உச்சக்கட்டம் தான் இந்த போராட்டம்.

துணை ராணுவப்படைகளில் 10% இட ஒதுக்கீடு உண்டு என்று மத்திய அரசு அறிவித்தாகி விட்டது. தகுதியுடைய அக்னிவீரர்கள் 4 ஆண்டு பணிக்குப் பிறகு துணை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என எழுத்துபூர்வமாகவும் அவர்களுக்கு உறுதி அளிக்க வேண்டும். முப்படைகளில் 4 ஆண்டுகள் பணிபுரிவதன் மூலம் துணை ராணுவத்திலோ அல்லது வேறு சவாலான பணியிலோ இணைவதற்கு அக்னிவீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள இது ஒரு நல்வாய்ப்பு என்ற தகவலை இளைஞர்களிடத்தில் மத்திய அரசு எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் பிறகு, இந்திய முப்படை முழு அளவில் அக்னிபாதை திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபாதை திட்டம் மிகச்சரியான பாதை. இதிலிருந்து அரசு பின் வாங்க கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x