Published : 24 Jun 2022 05:05 AM
Last Updated : 24 Jun 2022 05:05 AM

பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு பொருளாதாரத்தை மீட்க உதவும் - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் 14-வது உச்சி மாநாட்டை சீனா காணொலி மூலம் நேற்று நடத்தியது. இதில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரேசில் அதிபர் ஜெயர் பல்சோநரோ, ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார். இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதில், பிரிக்ஸ் உறுப்புநாடுகள் ஒரே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றுகின்றன. கரோனா பெருந்தொற்றின் பக்க விளைவுகள் தற்போது குறைந்துள்ளன. ஆனாலும், அதன் பாதிப்பை உலகளாவிய பொருளாதாரத்தில் இன்னும் காண முடிகிறது. நமது பரஸ்பர ஒத்துழைப்பால், கரோனா தொற்றுக்கு பிந்தைய உலகளாவிய பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு பயனுள்ள பங்களிப்பை அளிக்க முடியும்.

கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தியதில் ஒத்துழைப்புடன் செயல்பட்டது, பிரிக்ஸ் நாடுகள் இடையே சுங்கத்துறை ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் போன்றவை பிரிக்ஸ் அமைப்பை தனித்துவமான சர்வதேச அமைப்பாக செயல்படுத்த உதவியது. பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரிக்ஸ் நாடுகளின் இளைஞர்கள் கூட்டம், விளையாட்டு, சிவில் சொசைட்டி அமைப்புகள் மற்றும் சிந்தனைவாதிகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரிப்பதன் மூலம், நமது மக்களுக்கு இடையேயான தொடர்பை நாம் வலுப்படுத்தியுள்ளோம். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் யோகா நிகழ்ச்சியை நடத்தியதற்கு நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில் பிரதமர் மோடி பேசியதாவது:

கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளை சமாளிக்க சீர்திருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற தாரக மந்திரத்தை இந்தியா பின்பற்றுகிறது. இந்த அணுகுமுறை காரணமாக இந்திய பொருளதாரத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது. இந்தாண்டு 7.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

விண்வெளி, கடல்சார் பொருளாதாரம், பசுமை ஹைட்ரஜன், சுத்தமான எரிசக்தி, ட்ரோன்கள், புவிசார் தரவுகள் போன்ற துறைகளில் புதுமை கண்டுபிடிப்புக்கான கொள்கைகளை நாங்கள்உருவாக்கியுள்ளோம். இந்தியாவில் 70,000-க்கும் மேற்பட்ட தொடக்க நிறுவனங்கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரும் முதலீட்டில் தொடங்கப்பட்டவை. தொழில் செய்வதை எளிதாக்க விதிமுறைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டிஜிட்டல் மாற்றம்

தேசிய பெருந்திட்டத்தை இந்தியா உருவாக்கியுள்ளது. தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் தற்போது டிஜிட்டல் மாற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற மாற்றம் உலக அரங்கில் எங்கும் ஏற்பட்டதில்லை. 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 1 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை, சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x