சமாஜ்வாதியில் மீண்டும் இணைகிறார் அமர்சிங்: 7 உறுப்பினர்களுடன் மாநிலங்களவைக்கு பரிந்துரை

சமாஜ்வாதியில் மீண்டும் இணைகிறார் அமர்சிங்: 7 உறுப்பினர்களுடன் மாநிலங்களவைக்கு பரிந்துரை
Updated on
2 min read

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு உபியில் 7 வேட்பாளர்களில் ஒருவராக இன்று அமர்சிங் சமாஜ்வாதி சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் கடந்த இரண்டு வருடங்களாக அக்கட்சியில் மீண்டும் இணைவதாக பேசப்பட்டு வந்தது முடிவிற்கு வந்துள்ளது.

உபியின் தலைநகரான லக்னோவில் இன்று மதியம் நடந்த சமாஜ்வாதி கட்சியின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர் முலாயம்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளரான ராம்கோபால் யாதவ், மூத்த தலைவர்களான ஷிவ்பால்சிங் யாதவ் மற்றும் ஆசம்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக உபி முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் கிரன்மோய் நந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில், மாநிலங்களவைக்கு அக்கட்சி சார்பில் போட்டியிட உள்ள 7 வேட்பாளர்களின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டன.

இதில் முதலாவதாக அமர்சிங் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனால், அவர் மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் இணைவது உறுதியாகி உள்ளது. இவருடன் மற்ற வேட்பாளர்களாக வேனி பிரசாத் வர்மா, சஞ்சய் சேத், சுக்ராம் யாதவ், விஷாம்பர் பிரசாத் நிஷாத் அர்விந்த்சிங் மற்றும் ரேவதி ரமன்சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களில், சமாஜ்வாதியின் மூத்த தலைவரான வேனி பிரசாத் காங்கிரஸ் கட்சிக்கு தாவி கடந்த வருடம் திரும்பியவர்.

சமாஜ்வாதியின் சார்பில் தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அமர்சிங்கின் பதவிக்காலம் கடந்த வருடம் நவம்பர் மாதம் காலாவதி ஆனது. அப்போது முதல் மீண்டும் அப்பதவியை மீண்டும் பெற அமர்சிங் முயற்சித்து வந்தார். இதற்காக, சமாஜ்வாதியில் மீண்டும் சேரவும் தயாராக இருந்தவரது விருப்பம் இன்று நிறைவேறி உள்ளது.

ஜெயப்பிரதாவும் இணைவார்

சமாஜ்வாதியின் மூத்த தலைவரான ஆசம்கானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த 2010-ல் சமாஜ்வாதியில் இருந்து அமர்சிங் வெளியேறினார். இதற்கு ராம்பூர் தொகுதியில் 2009 மக்களவை தேர்தலில் ஜெயப்பிரதாவை மீண்டும் வேட்பாளராக்க ஆசம் எதிர்த்தது காரணமாக இருந்தது. இதனால், அமர்சிங்குடன் சேர்த்து அவரது தோழியான ஜெயப்பிரதாவும் கட்சியை விட்டு விலகினார். தற்போது, அமர்சிங் கட்சிக்குள் வந்து விட்டதால் அவருடம் ஜெயப்பிரதாவும் இணைவார் எனக் கருதப்படுகிறது.

யார் இந்த அமர்சிங்?

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு, தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உபியைச் சேர்ந்த இந்த இரட்டை சிங்குகள் கருதப்பட்டனர். இந்த இருவரும் இல்லாமல் தேசிய அரசியலில் கூட்டணிகள் உருவானதில்லை எனக் கருதப்பட்டது. தேவைப்படும் அந்தக் கூட்டணிகளை உடைத்து, தம் சுயலாப அரசியலை செய்வார்கள் என்றும் அமர் மற்றும் முலாயம் மீது புகார் நிலவி வந்தது. இதற்கு அமர்சிங் வளர்த்து வைத்திருக்கும் தொடர்புகள். காரணமாகக் கூறப்பட்டது,

அமர்சிங்கிற்கு, செல்வாக்கு இல்லாதத் துறை இருக்குமா என்பது சந்தேகமே எனவும், அரசியல் மட்டும் இன்றி, தொழிலதிபர்கள், பாலிவுட், சமூக சேவகர்கள் என தொடர்புகள்

பரந்து விரிந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இவை அனைத்திலும் ஒன்றுக்கு ஒன்று மோதி விடாமல், வெவ்வேறு பாதைகளில் கொண்டு போவதில் அமர்சிங்கின் கில்லாடித்தனத்திற்கு ஈடு இல்லை எனவும் கூறப்பட்டது.

ஒரே நாளில், காலையில் டெல்லியின் முக்கியமான அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமர்சிங், மாலையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் மும்பையின் தேநீர் அருந்திக் கொண்டிருப்பார். இரவு ஒரு தொழிலதிபருடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதே போல், ஏதாவது ஒரு பிரச்சனையால் தேசிய அரசியல் சூடு பறந்து கொண்டிருக்க, அமிதாப் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி ஒரு சில நாட்களுக்காக ‘ஜாலி டூர்‘ கிளம்பி விடுவார் எனவும் அமர்சிங்கை பற்றி கூறப்படுவது உண்டு. உபி சட்டப்பேரவைக்கு அடுத்த வருடம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அமர்சிங் அக்கட்சியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in