மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு; உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமன் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

முக்கிய குற்றவாளிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் இருவரும் பாகிஸ்தானில் பதுங்கியதால் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக் கப்பட்டனர். டைகர் மேமனின் தம்பி யாகூப் மேமன் உள்பட 12 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. யாகூப் மேமனின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்து விட்டார். இந்நிலையில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி யாகூப் மேமன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘ஆயுள் தண்டனைக்காலம் 14 ஆண்டுகள்தான். நான் 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டேன். எனவே தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. தூக்கு தண்டனையை நிறுத்திவைத்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க மகாராஷ்டிர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற சேம்பரில் விசாரிக்கக் கூடாது. நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் என்று கூறி யாகூப் மேமன் சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய முகமது ஆரிப் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. அதனுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in