பெங்களூரு பெண் ரவுடி தமிழகத்தில் தலைமறைவு: தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை

பெங்களூரு பெண் ரவுடி தமிழகத்தில் தலைமறைவு: தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை
Updated on
1 min read

பெங்களூருவில் உள்ள ஹூளிமாவு பகுதியை சேர்ந்தவர் யஷஷ்வினி (37). இவர் மீது கர்நாடகாவில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், நில அபகரிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. யஷஷ்வினி மீட்டர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொத்தனூரை சேர்ந்த தாயம்மா என்பவர் யஷஷ்வினியிடம் வட்டிக்கு ரூ. 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

தாயம்மா மே மாதத்துக்கான வட்டியை செலுத்தவில்லை. இதில் ஆத்திரமடைந்த யஷஷ்வினி கடந்த வாரம் தாயம்மா வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்த பொருட்களை உடைத்த‌தோடு, தாயம்மாவை தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த தாயம்மா சுப்பி ரமணியபுரா போலீஸில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீஸார் யஷ‌ஷ்வினியை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை யஷஷ்வினி தனக்கு நெஞ்சுவலிப்பதாக போலீஸாரிடம் நாடகமாடினார்.இதை நம்பிய போலீஸார் சுப்பிரமணியபுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் யஷஷ்வினி அன்றிரவு மருத்துவமனையின் ஜன்னல் வழியாக முதல் மாடியில் இருந்து குதித்து தப்பினார்.

நோயாளியாக நடித்து போலீஸாரை ஏமாற்றி விட்டு தப்பிய யஷஷ்வினியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில் அவர் தமிழகத்தில் தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே 2 தனிப்படை பிரிவுகளை சேர்ந்த போலீஸார் சென்னை, சேலம், வேலூர், கோவை, மதுரை ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in