Published : 24 Jun 2022 02:45 AM
Last Updated : 24 Jun 2022 02:45 AM

'24 மணிநேரத்தில் மும்பை வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேற தயார்' - சிவசேனா அறிவிப்பு

மும்பை: 24 மணிநேரத்துக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார் என சிவசேனா அறிவித்துள்ளது.

மகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதுவரை 37 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே முகாமில் இருந்துள்ளனர். இவர்கள் அஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்களின் கோரிக்கையாக, சிவசேனா மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது இருக்கிறது.

இந்தக் கோரிக்கை தொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் ஊடகங்கள் மூலம் பதில் கொடுத்தார். அதில், ``மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து சிவசேனா விலக வேண்டுமானால் முதலில் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வரவேண்டும். அதன்பின்பே மகாவிகாஸ் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து சிவசேனா நிச்சயம் பரிசீலிக்கும். அதைவிடுத்து சமூக வலைதளங்கள் மூலம் தகவல் கொடுக்கக் கூடாது.

ஷிண்டேவுடன் உள்ள 20 எம்எல்ஏக்கள் எங்களுடனும் தொடர்பில் உள்ளனர். இது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரும் போது தெரியும். எனவே 24 மணிநேரத்துக்குள் அதிருப்தி எம்எல்ஏக்கள் மும்பை வந்தால் மகாவிகாஸ் கூட்டணியிலிருந்து விலக தயார்" என்று தெரிவித்துள்ளார்.

அதேநேரம், ஏக்நாத் ஷிண்டே உட்பட அதிருப்தி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்ய சிவசேனா கட்சி சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது. நேற்றிரவு இந்த மனுவை அளித்துள்ளது மகாராஷ்ட்ரா அரசியலில் புதிய திருப்பத்தை கொடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x