Published : 23 Jun 2022 04:15 AM
Last Updated : 23 Jun 2022 04:15 AM

மகாராஷ்டிர நெருக்கடி | அதிருப்தி எம்எல்ஏக்கள் 34 பேர் ஆளுநருக்கு கடிதம் - சட்டப்பேரவையை கலைக்க உத்தவ் தாக்கரே முடிவு?

குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து நேற்று அசாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் செல்ல பஸ் மூலம் விமான நிலையம் புறப்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள். (உள்படம்) ஃபேஸ்புக்கில் மக்களிடையே உரையாற்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே.படங்கள்: பிடிஐ

மும்பை: எனது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்துள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யத் தயார் என்று மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதனிடையே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா கட்சி, சுயேச்சை உள்ளிட்ட சேர்ந்த 34 அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் அசாமில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 2019-ல் இந்தக் கூட்டணி பதவியேற்றது. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவாரும் உள்ளனர்.

தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த சிவசேனா, ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட இழுபறி, மோதல் காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்தது.

இந்நிலையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம், மாமூல் வசூலிக்கக் கூறியது போன்ற விவகாரங்களில் மகாராஷ்டிரா அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் அமைச்சர்கள் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது ஆளும் சிவசேனா எம்எல்ஏக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் பாஜக தலைமையிலான மத்திய அரசுடன் சுமுகமான போக்கு இருந்தால்தான் மகாராஷ்டிராவில் அமைதியான முறையில் ஆட்சி நடத்த முடியும் என்று சிவசேனா எம்எல்ஏக்கள் சிலர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு 2 இடங்கள் மட்டுமே வெல்ல வாய்ப்பிருந்த நிலையில் சுயேச்சைகள், பிறகட்சி எம்எல்ஏக்கள் என 23 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் 3-வது எம்.பி. பதவியையும் பாஜக வென்றது. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மகாராஷ்டிரா மேலவை தேர்தலிலும் ஆளும் கூட்டணியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது.

அதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் ஒத்துழைப்பு காணப்படவில்லை என பலரும் குற்றம்சாட்டினர்.

மேலவைக்கு நடந்த தேர்தலின் போது மாலை 5 மணி வரை சிவசேனா சட்டப்பேரவைக் குழு தலைவரான அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் இருந்தார்.

அதன்பிறகு அவரும், சிவசேனா எம்எல்ஏக்கள் சிலரும் திடீரென மாயமாயினர். அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேயுடன் அவர்கள் குஜராத் மாநிலம் சூரத்துக்கு இரவோடு, இரவாக சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கியது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டேயுடன் இருக்கும் 30 சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் பெயர் பட்டியல் வெளியானது. அவர்கள் சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அமைக்க பாஜக தீவிரம் காட்டி உள்ளது.

சிவசேனா எம்எல்ஏ ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். இதனால் 288 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவையில் தற்போதைய பலம் 287 ஆக உள்ளது. இதனால் 144 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்றால் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியும். சிறிய கட்சிகள், சுயேச்சைகள் என 26 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதனிடையே நேற்று சூரத்திலிருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் சென்று அங்குள்ள சொகுசு ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரே, முதல்வரின் அலுவலக இல்லமான வர்ஷா பங்களாவில் கட்சி மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதுதவிர காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினர். இதனிடையே ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. உத்தவ் தாக்கரேவுக்கு கரோனா தொற்று இருப்பதால் அவர் காணொலி வசதி மூலம் கூட்டத்தில் பங்கேற்றார். மாலை 5 மணிக்கு சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுவதாக கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

இதனிடையே, சிவசேனாவைச் சேர்ந்த 34 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் தங்களது சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேதான் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஷிண்டேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும்போது, “சிவசேனா சார்பில் 55 எம்எல்ஏக்கள் பேரவையில் உள்ளனர். இதில் 30 சிவசேனா எம்எல்ஏக்கள், 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் குவாஹாட்டி சொகுசு ஓட்டலில் உள்ளனர். இவர்கள் 34 பேரும் தங்களது தலைவர் ஏக்நாத் ஷிண்டேதான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் 34 பேரும் எழுதிய கடிதம் ஆளுநர் கோஷ்யாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து மாலையில் ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் மக்களிடையே முதல்வர் உத்தவ் தாக்கரே பேசினார். அவர் பேசும்போது, “நான் எனது ராஜினாமா கடிதத்தைத் தயாராக வைத்துள்ளேன். எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா செய்யத் தயார். இந்துத்துவா கொள்கையை விட்டு சிவசேனா விலகிச் செல்லாது.

ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் எம்எல்ஏக்கள் என்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் உள்ளனர். நான் பதவி விலகத் தயார். ஆனால் எனக்குப் பின்னால் முதல்வர் பதவியில் அமர்பவர் சிவசேனாவைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.

அதிருப்தி எம்எல்ஏக்களில் யாராவது ஒருவர் என் முன்பு வந்து நான் முதல்வராக நீடிக்க விருப்பம் இல்லையென்று தெரிவித்தால் உடனடியாக பதவியை துறக்கிறேன்” என்றார். இதனிடையே சட்டப்பேரவையை கலைக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மும்பை திரும்பிய எம்எல்ஏ

இந்நிலையில் சூரத்தில் ஏக்நாத் ஷிண்டேவுடன் தங்கியிருந்த சிவசேனா எம்எல்ஏ நிதின் தேஷ்முக் நேற்று காலை மும்பை திரும்பினார். தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், தனக்கு வலுக்கட்டாயமாக ஊசி போட்டதாகவும், தான் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x