

ஒடிசாவில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தைத் தாங்கியிருக்கும் தூண்கள் உடையும் நிலையில் உள்ளன. மேலும், கோபுரம் மற்றும் தூண்கள் உள்ளிட்ட சில பகுதிகளும் பழுதடைந்து சீர் செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இரும்புத் தூண்கள் கடல்காற்று காரணமாக வலுவிழந்துள்ளன.
கோயிலின் நிலை குறித்து நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. கோயிலைப் புனரமைக்க, சென்னை ஐஐடியின் உதவியை நாடி, அதன் பாரம்பரிய பாதுகாப்பு பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளது தொல்லியல் துறை.
இதுதொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஐஐடி ஆய்வுக் குழு கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பழுதுநீக்கும் பணிகள் குறித்த அறிக்கையை கடந்த ஜனவரியில் அளித்தது. இப்பணிகள் தற்போது நடைபெறுகின்றன. எனினும், கோயிலை முழுமையாகப் புனரமைக்க இது போதுமானதல்ல. எனவே, கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பெரிய அளவிலான பழுதுகள் பற்றி ஆய்வறிக்கை அளித்து அந்தப் பணிகளை மேற்கொள்ளும்படி ஐஐடியிடம் கோரப்பட்டுள்ளது” என்றனர்.
ஐஐடி-யின் அறிக்கைக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் தொடங்கும். இதனிடையே, கோயில் நிர்வாகக் குழு கூட்டத்தில், எவர்சில்வர் உலோகத்தைப் பயன்படுத்தி தூண்களின் பழுதை நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இம்முடிவை தொல்லியல் துறை நிராகரித்து விட்டது. எனவே, கோயில் நிர்வாகக் குழு தலைவரும், ஒடிசா சட்ட அமைச்சருமான அருண் சாஹூ தலைமையில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர்கோயில் தேர்த்திருவிழா வரும் ஜூலையில் தொடங்கவுள்ளது.