மகாத்மா காந்தி கொலை குறித்து மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு

மகாத்மா காந்தி கொலை குறித்து மீண்டும் விசாரிக்க கோரி வழக்கு
Updated on
1 min read

மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் உள்ள சதி குறித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிடக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அபிநவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், எழுத்தாளரு மான பங்கஜ் பதனிஸ் மும்பை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர் பான பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

“மகாத்மா காந்தி கொலை குறித்து விசாரித்த ஜே.எல். கபூர் கமிஷன், காந்தி கொலையின் பின்னணியை முழுமையாக வெளிக்கொணரவில்லை. காந்தி சுடப்பட்டபோது, மூன்று குண்டு காயம் ஏற்பட்டதாகவும், எஞ்சிய நான்கு குண்டுகளை துப்பாக்கி யிலிருந்து காவல் துறை கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அப்போது எடுக்கப்பட்ட ஊடக வீடியோ, புகைப்பட ஆதாரங்களின்படி காந்திக்கு நான்கு குண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன. புதிய ஆணையம் அமைத்து அந்த நான்காவது குண்டு யாரால் சுடப்பட்டது எனக் கண்டறியப்பட வேண்டும்.

நாதுராம் கோட்சே தவிர வேறு கொலையாளிகள் யாரும் இருந்தனரா என விசாரிக்க உத்தரவிட வேண்டும். காந்தி-ஜின்னாவின் ‘மக்களுக்கிடையே நேரடித் தொடர்பு’ திட்டத்தை சீர்குலைப்பதற்காக, இந்தியா-பாகிஸ்தான் மக்களிடையே பகைமையை ஏற்படுத்துவதற்காக இந்த கொலை நடந்ததா என ஆய்வு செய்ய வேண்டும்.

காந்தி கொலை வழக்கிலிருந்து வீர் சவார்க்கர் விடுவிக்கப்பட்டுள்ளதால், கபூர் கமிஷன் அறிக்கையில் சவார்க்கருக்கு எதிரான கருத்துகள் நீக்கப்பட வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மனு வரும் ஜூன் 6-ம் தேதி, தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in