Published : 22 Jun 2022 03:48 AM
Last Updated : 22 Jun 2022 03:48 AM
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க, பாஜகவின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு முன்பாக மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்துப் பேசினர். இதனால் வெங்கய்ய நாயுடு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நேற்று இரவு அறிவிக்கப்பட்டார். இதை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் இப்பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண் என்ற பெருமை கிடைக்கும்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பைதபோசி கிராமத்தில் 1958-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி பிறந்தார் திரவுபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர் ரைராங்பூர் சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக 2000 முதல் 2009 வரை பதவி வகித்தார். 2000-வது ஆண்டு மார்ச் 6 முதல் 2004 மே 16 வரை, பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி வரை அப்பதவியில் நீடித்தார்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் 17 கட்சிகள் இணைந்து கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் விரும்பின. அவர், தனக்கு விருப்பமில்லை என மறுத்துவிட்டார். இதையடுத்து தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அவர்களும் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, திமுக எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு கூட்டறிக்கையை ஜெய்ராம் ரமேஷ் வாசித்தார். அதில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை தேர்வு செய்துள்ளோம். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம். பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பிஹாரைச் சேர்ந்த 84 வயதான யஷ்வந்த் சின்ஹா, ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மத்திய அரசில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018-ல் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார். 2021 மார்ச்சில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். எதிர்க்கட்சிகளின் நேற்றைய கூட்டத்துக்கு முன்பாக திரிணமூல் கட்சியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். யஷ்வந்த் சின்ஹா 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT