

மருத்துவ நுழைவுத்தேர்வு தொடர்பான வழக்கில், மாநில அரசுகள் சார்பில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களை இந்த ஆண்டு மட்டும் அனு மதிக்கலாமா என்பது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
இந்த ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட் டுள்ளது. கடந்த 1-ம் தேதி நடந்த நுழைவுத்தேர்வை முதல்கட்ட தேர்வாகவும், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்கலாம் என்றும் உத்தர விடப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க் கையை முடிக்க உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கை களை கண்காணிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. நுழைவுத்தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள மாநில சட்டப் பேரவையில் தனிச்சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளதும் இந்த மனுக் களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேசிய நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று உறுதியுடன் தெரிவித்தனர். மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ள சட்டப் படி மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு 6-ம் தேதிக்குள்(இன்று) பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.