

காஷ்மீரில் இன்று (சனிக்கிழமை) காலை நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இது குறித்து ராணுவ உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் டோகியாபூரைச் சேர்ந்த அச்பக் கான்டர், இஷ்பக் அகமது பாபா, ஹசீப் அகமது என அடையாளம் தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவர்" என்றார்.
குப்வாராவில் ஊடுருவல் முறியடிப்பு:
இதேபோல் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை வடக்கு காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதி வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சியை ராணுவத்தினர் முறியடிததுள்ளனர்.
ஆனால், இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ரமேஷ் யாதவ் உயிர் நீத்தார். இதனை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.