Last Updated : 10 Jun, 2014 09:42 AM

 

Published : 10 Jun 2014 09:42 AM
Last Updated : 10 Jun 2014 09:42 AM

கர்நாடகாவில் ஹரி பிரசாத், ராஜீவ் கவுடா போட்டி: முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சீட் மறுப்பு

கர்நாடகாவில் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் பி.கே. ஹரி பிரசாத், ராஜீவ் கவுடா ஆகியோர் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு (82) வாய்ப்பு மக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு வரும் 19-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வாரம் தொடங்கி திங்கள்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. காங்கிரஸ் சார்பாக இப்போதைய மாநிலங்களவை எம்.பி.க்களான முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், பி.கே.ஹரி பிரசாத்தும் மீண்டும் போட்டி யிடுவார்கள் என கூறப்பட்டது.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான திங்கள்கிழமை காலை, காங்கிரஸ் சார்பாக ஹரி பிரசாத் மற்றும் ஐஐடி பேராசிரியர் ராஜீவ் கவுடா போட்டியிடுவார்கள் என அறிவிக் கப்பட்டது. எஸ்.எம்.கிருஷ்ணா வுக்கு காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு மறுத்ததால் அவரும், அவருடைய ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ் வர் கூறுகையில், ''எஸ்.எம்.கிருஷ் ணாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. காங்கிரஸ் மேலிடம் அவருக்கு வேறொரு நல்ல வாய்ப்பை உருவாக்கித் தரும்" என நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸிலிருந்து விலகப் போவ தாக செய்திகள் வெளியானதால் திடீர் பரபரப்பு ஏற்பட்ட‌து.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எஸ்.எம்.கிருஷ்ணாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தினார். அவர் பேசுகையில், ''82 வயதான உங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக யோசித்தது. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பெரும் பான்மையானவர்கள் தெரிவித்த தாலே, உங்களுக்கு வாய்ப்பு அளிக்கமுடியவில்லை'' என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரில் எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் பேசுகையில், "'கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுகிறேன். கட்சியை விட்டு விலகும் பேச்சுக்கே இடமில்லை. இனி எப்போதும் போல காங்கிரஸின் வளர்ச்சிக்கு அடிமட்ட தொண்டனைப் போல முழுமனதுடன் பணியாற்றுவேன்'' என்றார்.

ஐஐடி பேராசிரியருக்கு வாய்ப்பு

காங்கிரஸ் சார்பாக பி.கே.ஹரி பிரசாத் மற்றும் ராஜீவ் கவுடா (50) ஆகியோர் முதல்வர் சித்தராமய்யா உடன் சென்று திங்கள் கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தனர். கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 122 உறுப்பினர்கள் இருப்பதால் இருவரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

ராஜீவ் கவுடா, பெங்களூர் ஐஐடி-யில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கர்நாடக மாநிலம் முல்பாகலைச் சேர்ந்த இவர், பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகராகக் கருதப்படும் இவர், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x