Published : 21 Jun 2022 10:26 PM
Last Updated : 21 Jun 2022 10:26 PM

பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு... யார் இவர்?

புதுடெல்லி: குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு திரௌபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜூலை 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா இன்று அறிவிக்கப்பட்டார். இப்போது பாஜகவும் தரப்பு வேட்பாளரை அறிவித்துள்ளது.

யார் இந்த திரௌபதி முர்மு?

ஒடிசாவை சேர்ந்த பழங்குடி பெண்ணான இவர் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒடிசாவிலிருந்து ஒரு மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடியின தலைவரும் இவரே.

ஜூன் 20, 1958-ல் பிறந்த திரௌபதி முர்மு, ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர் ஒடிசா அரசியலில் நுழைந்தவர். தனது சொந்த மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள ராய்ராங்பூ தொகுதியில் பாஜக சார்பில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராய்ராங்பூரின் கவுன்சிலராக வெற்றிபெற்று தனது தேர்தல் அரசியலில் பயணத்தை தொடங்கிய முர்மு ஒரு அரசியல்வாதியாக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2013 முதல் 2015 வரை பாஜகவின் எஸ்டி மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்துள்ளார். என்றாலும், கவுன்சிலர் ஆன 1997ம் ஆண்டு அவருக்கு பாஜகவின் எஸ்டி மோர்ச்சா மாநில துணைத் தலைவர் என்ற பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியின்போது ஒடிசாவின் போக்குவரத்து, வர்த்தகம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு போன்ற பல்வேறு துறையின் அமைச்சராக பதவி வகித்தவர் 2015 முதல் 2021 வரை ஜார்கண்ட் ஆளுநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தான் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுவார்.

திரௌபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "திரௌபதி முர்மு ஜி தனது வாழ்க்கையை சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அர்ப்பணித்துள்ளார். அவர் திறமையான நிர்வாக அனுபவத்துடன் ஒரு சிறந்த ஆளுநராக பதவி வகித்தவர். அவர் நம் நாட்டின் சிறந்த ஜனாதிபதியாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x