

அசாமில், ஆட்சியமைக்க முன்வருமாறு பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு ஆளுநர் பத்மநாபா பாலகிருஷ்ண ஆச்சார்யா நேற்று அழைப்பு விடுத்தார்.
பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் சர்பானந்த சோனோவால், அசாம் கணபரிஷத் தலைவர் அதுல் போரா, போடோலாந்து மக்கள் முன்னணி தலைவர் ஹக்ரமா மோஹிலரி தலைமையிலான பிரதிநிதிகள் ஆளுநர் பத்மநாபா பாலகிருஷ்ண ஆச்சார்யாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
இதையடுத்து ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துளஅளார்.
நாளை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அசாமில் பாஜக முதன்முறையாக ஆட்சியமைக்கிறது.
முன்னதாக, பாஜக சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவராக சர்பானந்த சோனோவால் நேற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அவையின் கட்சித் தலைவராக சோனோவாலை எம்எல்ஏ ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்மொழிந்தார்.
எம்எல்ஏக்கள் புகுன், அதுல் போரா, அங்கூர்லதா தேலா, பாபேஷ் கலிடா, ஏ.சி. ஜெய் ஆகியோர் வழிமொழிந்தனர்.
இக்கூட்டத்தில் மேற்பார்வையாளராக பங்கேற்ற மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட், சோனோவாலை சட்டப்பேரவை கட்சித் தலைவராக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சோனோவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடந்து கொள்வேன். பாஜக மட்டும் 60 தொகுதிகளில் வென்றதை நான் எதிர்பார்க்கவில்லை. மக்கள் தங்கள் இதயப்பூர்வமாக தீர்ப்பை அளித்துள்ளனர். இதைவிட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது. எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அசாம் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது எங்கள் அரசின் முன்னுரிமையாக இருக்கும்” என்றார்.