Published : 20 Jun 2022 04:54 AM
Last Updated : 20 Jun 2022 04:54 AM

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை; அக்னி பாதை திட்டத்தை வாபஸ் பெறமாட்டோம்: மத்திய அரசு

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும், திட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்குஎதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திட்டத்தைக் கைவிடக் கோரி பிஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில், ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக இந்த அருமையான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை. அக்னி பாதை மூலம் சேருபவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம். தீ வைப்பு போன்றநாசவேலைகளில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடம் கிடைக்காது. வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் ராணுவத்தில் சேர முடியாது. ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்படும். நாசவேலைகளில் ஏதும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்றுபெற்றுத் தந்தால்தான் ராணுவத்தில் சேர முடியும்.

அக்னி பாதை திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் முப்படையில் சேர வாய்ப்பு உள்ளது. பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் பரிந்துரைகளின் பேரில் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

அக்னி வீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். அக்னி வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும்.சியாச்சின் உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரியும் வழக்கமான ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் படியே,அக்னி வீரர்களுக்கும் வழங்கப்படும்.

அக்னி வீரர்களுக்கு பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்கள் அறிவித்துள்ள சலுகைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. போராட்டம் காரணமாக எதையும் அறிவிக்கவில்லை.

அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில், வீரர்கள் தேர்வு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை அதிகரிக்கப்படும். பின்னர் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை உயரும். இந்த திட்டத்தை ஆராயவும் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் முதல்கட்டமாக 46 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அக்னி வீரர்கள் தேர்வு 46 ஆயிரத்திலேயே நீடிக்காது. எதிர்காலத்தில் 1.25 லட்சம் பேர் வரை செல்லும்.

இவ்வாறு அனில் புரி கூறினார்.

ராஜ்நாத் சிங் ஆலோசனை: இதனிடையே, அக்னி பாதை திட்டத்துக்கு எழுந்து வரும் எதிர்ப்பு தொடர்பாக முப்படைத் தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்றும் ஆலோசனை நடத்தினார். இளைஞர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும், திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் அவர்ஆலோசனை நடத்தியதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

24 முதல் ஆள்சேர்ப்பு: அக்னி பாதை திட்டத்தின்கீழ் வரும் 24-ம் தேதி முதல் விமானப் படைக்கு ஆள்சேர்க்கும் பணிகள் தொடங்கும் என்றும் அதற்கான விவரங்களையும் விமானப்படை நேற்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்னி பாதை திட்டத்தின்கீழ் விமானப் படைக்கு ஆள்சேர்க்கும் பணி, வரும் 24-ம்தேதி முதல் தொடங்குகின்றன. முதல்கட்டமாக ஆன்லைன் தேர்வு துவங்கும். முதல் பேட்ஜ் வீரர்கள் டிசம்பரில் பணியில் சேருவர். அவர்களுக்கு டிச.30 முதல் பயிற்சி துவங்கும்.

இந்த திட்டத்தின்கீழ் சேருவதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயது வரை (இந்த ஆண்டு23 வயது). ஏற்கெனவே அமலில் உள்ள கல்வித் தகுதி, உடல் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும். தேவைப்பட்டால் கூடுதல் கல்வித் தகுதிகள் மற்றும்பிற தகுதிகள் குறித்த விவரங்களை விமானப்படை விரைவில் வெளியிடும்.

பணியில் சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு 4 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் சிறப்பாக செயல்படுவோர் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்டு 4 ஆண்டு பயிற்சிக்கு பிறகு 25 சதவீதம் பேர் தொடர்ந்து பணியாற்ற சேர்த்து கொள்ளப்படுவர்.

மற்றவர்களுக்கு பயிற்சி முடியும்போது சுமார் ரூ.11 லட்சம் உட்படபல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திட்டத்தில் பெண்கள்: அக்னி பாதை திட்டத்தில் பெண்களும் சேர்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கடற்படையின் வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு நவம்பர் 21 முதல் கடற்படை அக்னி வீரர்களுக்கு, ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சிக்லா கப்பலில் பயிற்சி துவங்கும்.

இந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் அனுமதிக்கப்படுவர். கடற்படையில் தற்போது 30 பெண் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் கப்பலில் பணியாற்றி வருகின்றனர். அக்னி பாதை திட்டம் மூலம் பெண்களும் சேர்க்கப்படுவர். அவர்களும் போர்க்கப்பலில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.

10 சதவீத பணியிடங்கள்: தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் அக்னி வீரர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 சதவீத காலிப் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டத்துக்கு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு, கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (எச்ஏஎல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்(பெல்) உள்ளிட்ட 16 பொதுத்துறை நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நடைமுறைகளை செயல்படுத்த ஏதுவாக, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள்கொண்டு வரப்படும். மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு, அக்னி வீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக, தேவையான வயது தளர்வுகளும் வழங்கப்படும்.

மேலும், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் சேர 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். அடுத்தடுத்த பேட்ச்களில் வெளியேறுவோருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போலி செய்திகள்: இதனிடையே அக்னிபாதை போராட்டம் குறித்து போலியான செய்திகளை பரப்பியதாக 35 வாட்ஸ்-அப் குரூப்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. மேலும் அக்னிபாதை திட்டம் குறித்து சமூக வலைதளங்களில் நாடு முழுவதும் போலியான செய்திகளை பரப்பியதாகவும், போராட்டங்களை ஏற்பாடு செய்ததாகவும் 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x