

கர்நாடகாவில் தலித் இளைஞரை காதலித்த கல்லூரி மாணவியை அவரது குடும்பத்தினர் கவுரவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இளம் பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், காவனிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரா ரெட்டி (42). இவரது மகள் பிரியா ரெட்டி (17) தனியார் கல்லூரியில் பியூசி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் பிரியா ரெட்டிக்கும் உடன் படித்த தலித் இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து பிரியா ரெட்டி குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர்.
எனினும் பிரியா ரெட்டி தனது காதலரை அவ்வப்போது தனிமை யில் சந்தித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரியா ரெட்டியின் தந்தை பைரா ரெட்டி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். ஆனாலும் பிரியா ரெட்டி தனது காதலை மறக்க முடியாது என உறுதியுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், பைரா ரெட்டி நேற்று முன்தினம் இரவு திருப்பதிக்கு செல்வதாக கூறி குடும்பத்தினர் அனைவரையும் காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் திருப்பதிக்கு செல்லாமல், கோலாரை அடுத்துள்ள தம்டம் பள்ளி கிராமத்தில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டில் காரை நிறுத்தினார். அங்கு மீண்டும் பிரியா ரெட்டியை குடும்பத்தினர் அனைவரும் அடித்து துன்புறுத்தி யுள்ளனர்.
ஒரு கட்டத்தில் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பிரியா ரெட்டி தெரிவித்ததால், ஆத்திர மடைந்த குடும்பத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் தனது மனைவி, மகனுடன் இணைந்து பிரியா ரெட்டியை கொலை செய்ததாக பைரா ரெட்டி ஒப்புக் கொண்டார்.
கவுரவ கொலை தொடர்பாக ‘தி இந்து’விடம் கோலார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திவ்யா கூறும்போது, ‘‘மூன்று பேரையும் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்’’என்றார்.
இந்த சம்பவத்துக்கு கர்நாடக மாநில மகளிர் ஆணைய தலைவர் மஞ்சுளா மானசா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ‘‘நாட்டில் நடக்கும் இத்தகைய படுகொலைகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. பசவண்ணர் பிறந்த கர்நாடகாவில் சாதி ரீதியிலான படுகொலைகள் தொடர்வது துரதிஷ்டவசமானது’’ என்றார்.