

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் மகாராஜா பஜார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகளை அவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டபோது இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கான கமாண்டர் சைஃபுல்லா எனத் தெரியவந்தது. மற்றொரு தீவிரவாதியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இவர்கள் இருவரும் குப்வாரா நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் ஸ்ரீநகரில் கல்லூரியில் படிப்பதாகவும் கூறி வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர்.
ஸ்ரீ நகரில் நேற்று முன்தினம் 3 போலீஸார் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இத்தாக் குதல்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என போலீஸார் கூறினர்.