Published : 19 Jun 2022 05:09 PM
Last Updated : 19 Jun 2022 05:09 PM

அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்படாது: பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தசூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில், “அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎப்), அசாம் ரைபிள்ஸ் படைகளில் சேர 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

மேலும், இந்த படைகளில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பில், அக்னி பாதை வீரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். அக்னி பாதை திட்டத்தின் முதல் அணியினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “அக்னி பாதை திட்ட வீரர்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை, பாதுகாப்புத் துறை அலுவலக பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்

மேலும், மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் 16 பொதுத் துறை நிறுவனங்களான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், பாரத் எர்த் மூவர்ஸ், பாரத் டைனமிக்ஸ், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ், கோவா ஷிப்யார்டு, இந்துஸ்தான் ஷிப்யார்டு, மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ், மிஸ்ரா தாத்து நிகாம், ஆயுத வாகனங்கள் தயாரிப்பு நிறுவனம் (ஏ.வி.என்.எல்), அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் (ஏ.டபிள்யூ. அண்ட் இ.ஐ.எல்), எம்.ஐ.எல்., ஒய்.ஐ.எல், ஜி.ஐ.எல், ஐ.ஓ.எல், டி.சி.எல். ஆகியவற்றில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

தேவைக்கேற்ப வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்படும். இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறியதாவது:

இந்த சீர்திருத்தம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்த சீர்திருத்தத்தின் மூலம் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம். இன்று, அதிக எண்ணிக்கையிலான ஜவான்கள் தங்கள் 30 வயதிற்குள் உள்ளனர். அதேசமயம் அதிகாரிகள் கடந்த காலத்தை விட மிகவும் தாமதமாக அந்த இடத்தை பெறுகிறார்கள்.

அனில் பூரி

அக்னிவீரர்கள் சியாச்சின் போன்ற பகுதிகளிலும், தற்போது பணிபுரியும் வழக்கமான ராணுவ வீரர்களுக்குப் பொருந்தும் அதே சலுகையைப் பெறுவார்கள். சேவை நிலைமைகளில் அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் இல்லை. ஆயுதப்படைகள் இளமையையும் அனுபவத்தையும் கொண்டு வர விரும்புகிறோம். அக்னிபாதை போன்ற பாதுகாப்பு சீர்திருத்தங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

லெப்டினன்ட் ஜெனரல் பூரி கூறுகையில், ‘‘அக்னிபாதை திட்டத்தின் கீழ் 50,000-60,000 வீரர்களின் சேர்க்கை இருக்கும், இது தொடர்ந்து 1 லட்சமாக அதிகரிக்கும். திட்டத்தை ஆய்வு செய்ய 46,000 – என்ற எண்ணிக்கையில் சிறிய அளவில் தொடங்குகிறோம். உள்கட்டமைப்பு திறனை உருவாக்குவதற்காக குறைந்த அளவில் தொடங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

இதுபோலவே “அக்னிவீர் தொகுதி எண் 1 பதிவு செயல்முறை ஜூன் 24 முதல் தொடங்கும் மற்றும் ஜூலை 24 முதல் கட்டம் 1 ஆன்லைன் தேர்வு செயல்முறை தொடங்கும். முதல் தொகுதி டிசம்பரில் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 30-ம் தேதிக்குள் பயிற்சி தொடங்கும்" என்று ஏர் மார்ஷல் எஸ்கே ஜா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x