தெலங்கானா அக்னிபாதை கலவரம்: வாட்ஸ் குரூப் மூலம் கலவரத்தை தூண்டிய ராணுவ தேர்வு பயிற்சி அகடமி உரிமையாளர் கைது

தெலங்கானா அக்னிபாதை கலவரம்: வாட்ஸ் குரூப் மூலம் கலவரத்தை தூண்டிய ராணுவ தேர்வு பயிற்சி அகடமி உரிமையாளர் கைது
Updated on
1 min read

ஹைதராபாத்: அக்னிபாதை ஆள்சேர்ப்பு திட்டம் தொடர்பாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த பெரும் வன்முறையில், வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பரிமாறியதும் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவ தேர்வுக்கு பயிற்சி தரும் அகடமி நடத்தி வருகிறார்.

ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றும், மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார், உத்தரப் பிரதேச, தெலங்கானா மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது.

ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டன. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில், 5 ரயில் என்ஜின்கள், 30 ரயில் பெட்டிகள், பார்சல் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்ததில் முற்றிலும் நாசம் ஆனது. ரயில் நிலையத்தில் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். அவர் வாரங்கலை சேர்ந்த ராகேஷ் என்பவர் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களால் தென் மத்திய ரயில்வே துறைக்குரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில்கள் ரத்து ஆனதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இன்னமும் கணக்கிடப்படவில்லை. சேதமடைந்த செகந்திராபாத் ரயில் நிலையமும் சரி செய்யப்பட்டு, அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்டு, ரயிலை எரிக்க செகந்திராபாத் வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செகந்திராபாத் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக தற்போது போலீஸார் 52 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியான சுப்பாராவ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளது. இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

சுப்பாராவ் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத், நர்சரோபேட் உள்ளிட்ட ஏழு இடங்களில் கிளைகளைக் கொண்ட ராணுவ ஆர்வலர்களுக்கான பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறார்.

இவரின் அழைப்பின் பேரில் சுமார் 10 ராணுவ அகாடமியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரயில்கள் மூலம் செகந்திராபாத் வந்து இந்த கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களால் பல ரயில்களுக்கு தீ வைக்கப்பட்ட வன்முறையின் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் சுப்பா ராவ் என்று கூறப்படுகிறது. அவர் கும்பலைத் திரட்ட வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in