Published : 19 Jun 2022 03:54 AM
Last Updated : 19 Jun 2022 03:54 AM

கனமழை, வெள்ளம் காரணமாக அசாம், மேகாலயாவில் 31 பேர் உயிரிழப்பு

அசாம் மாநிலத்தின் கம்ரப் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், ராங்கியா என்ற இடத்துக்கு அருகேயுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேற்று உணவு பரிமாறப்பட்டது. படம்: பிடிஐ.

குவஹாட்டி: அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி அசாம் மாநிலத்தில் 12 பேரும், மேகாலயாவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர். திரிபுரா தலைநகர் அகர்தலாவிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு 6 மணி நேரத்தில் 145 மி.மீ மழை பெய்தது. இது கடந்த 60 ஆண்டுகளில் பெய்த 3-வது மிகப்பெரிய கனமழை என்பது குறிப்பிடத்தக்கது.

மேகாலயாவின் மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய பகுதிகளில் கடந்த 1940-ம் ஆண்டுக்குப்பின் மிக அதிகளவில் கனமழை பெய்துள்ளது. வெள்ளம் காரணமாக இங்கு அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவியை மேகாலயா முதல்வர் கன்ராட் சங்மா அறிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் 3,000 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 43 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்த படகு மூழ்கியது. இதில் 21 பேர் மீட்கப்பட்டனர், 3 குழந்தைகளை காணவில்லை.

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை, தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மீட்பு பணிக்கு அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற குவஹாட்டி மற்றும் சில்சர் இடையே சிறப்பு விமானங்களை இயக்கவும் அசாம் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில், நீர்மின் திட்டத்துக்காக கட்டப்பட்டு வரும் அணை ஒன்றை சுபான் சிரி ஆற்றின் வெள்ள நீர் மூழ்கடித்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x